சர்பராஸ் 162 ரன் விளாசல்; மும்பை வலுவான முன்னிலை: தமிழகத்துக்கு நெருக்கடி

மும்பை: தமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், சர்பராஸ் கானின் அபார ஆட்டத்தால் மும்பை அணி வலுவான முன்னிலை பெற்றது. பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், தமிழகம் முதல் இன்னிங்சில் 144 ரன்னுக்கு சுருண்டது (36.2 ஓவர்). முதல் நாள் முடிவில் மும்பை 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்திருந்தது. சர்பராஸ் கான் 46 ரன், தணுஷ்கோடியன் 9 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் விளையாடிய இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 167 ரன் சேர்த்தது.

தணுஷ்கோடியன் 71 ரன் (114 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். அடுத்து வந்த துஷார் தேஷ்பாண்டே சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேற, சர்பராஸ் - மோஹித் அவஸ்தி ஜோடி 9வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தது. சர்பராஸ் 162 ரன் (220 பந்து, 19 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி திரிலோக் நாக் பந்துவீச்சில் ஜெகதீசன் வசம் பிடிபட்டார். அதன் பிறகும் தமிழக வீரர்களின் பொறுமையை சோதித்த அவஸ்தி - சித்தார்த் ராவுத் ஜோடி 10வது விக்கெட்டுக்கு 92 ரன் சேர்த்து மும்பை அணி வலுவான முன்னிலை பெற உதவியது.

அவஸ்தி 69 ரன் எடுத்து (97 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) வெளியேற, மும்பை அணி முதல் இன்னிங்சில் 481 ரன் குவித்து ஆல் அவுட்டானது (106.4 ஓவர்). சித்தார்த் 31 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தமிழக பந்துவீச்சில் திரிலோக், அஸ்வின் கிறிஸ்ட் தலா 3, சாய் கிஷோர் 2, விக்னேஷ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 337 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய தமிழகம், 2ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்துள்ளது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்கவே இன்னும் 275 ரன் தேவை என்ற நிலையில், இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: