இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்தால் உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் உயிரிழப்பு: விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் 18 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக உஸ்பெகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த விசாரணைக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. அதே போல் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மேரியோன் பயோடெக் நிறுவனத்தின் `டாக்-1 மேக்ஸ்’ இருமல் மருந்து உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``நுரையீரல் தொடர்பான நோய்களுக்காக சிகிச்சை பெற்று வந்த 21 குழந்தைகளுக்கு இந்தியாவிலிருந்து தயாரிக்கப்பட்ட டாக்-1 மேக்ஸ் என்ற இருமல் மருந்து கொடுக்கப்பட்டது. இந்த மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதில் 3 முதல் 7 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 3 முதல் 4 தடவை 2.5 மி.லி. என்ற விகித அளவீட்டில் தான் குழந்தைகளுக்கு மருந்து கொடுக்கப்பட்டது,’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலக சுகாதார அமைப்பின் உதவியுடன் இந்த விவகாரத்தை அணுக உஸ்பெகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.

இதையடுத்து, உஸ்பெகிஸ்தான் அரசு குற்றச்சாட்டின் அடிப்படையில் மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரணையை நடத்த ஒன்றிய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து  ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், ``உஸ்பெகிஸ்தானில் இருந்து தகவல் கிடைத்தததும், நொய்டாவில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் உபி. மாநில மருந்து கட்டுப்பாட்டு மற்றும் ஒன்றிய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள் ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. இருமல் மருந்து மாதிரிகள் அங்கு இருந்து சண்டிகரில் உள்ள மண்டல மருந்துகள் பரிசோதனை ஆய்வகத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

ஆய்வறிக்கை அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்று தெரிவித்தார். இதனிடையே, டாக்-1 மேக்ஸ் இருமல் மருந்து தயாரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மேரியோன் பயோடெக் நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் தெரிவித்தார். மேரியோன் பயோடெக் நிறுவனம் டாக்-1 மேக்ஸ் இருமல் மருந்துகளை இந்தியாவில் விற்பதில்லை. அவை இங்கு தயாரிக்கப்பட்டு உஸ்பெகிஸ்தானுக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக உபி மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறுகையில், ``குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக   உஸ்பெகிஸ்தான் அரசிடம் விவரங்கள் கோரப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக இந்தியா, தனிநபர்கள் மற்றும் உஸ்பெகிஸ்தானில் உள்ள இந்நிறுவனத்தின் பிரதிநிதிகள் மீது உஸ்பெகிஸ்தான் அரசு சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது. இதில் அந்த தனிநபர்களுக்கு தூதரக அளவிலான உதவிகள் வழங்க இந்திய அரசு தயாராக உள்ளது,’’ என்று கூறினார்.

முன்னதாக, கடந்த அக்டோபர் மாதம் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் அரியானாவில் உள்ள சோனிபட் தலைமையிடமாக கொண்ட மெய்டென் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்ததால் சிறுநீரக பாதிப்பு காரணமாக 66 குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இது குறித்து உலக சுகாதார அமைப்பு விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: