நசரத்பேட்டை சிக்னல் பகுதியில் கார் மோதி நேரு சிலை சேதம்: காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பூந்தமல்லி: சென்னையில் இருந்து சென்ற கார் மோதியதில் பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை சிக்னல் பகுதியில் உள்ள நேரு சிலை சேதம் அடைந்தது. பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை சிக்னல் அருகே நேரு சிலை உள்ளது. இந்த சிலையை கடந்த 1988ம் ஆண்டு மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி திறந்து வைத்தார். தற்போது இந்த பகுதியில் சென்னை- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டு வருவதால், பீடத்துடன் நேரு சிலையை வேறிடத்தில் மாற்றி வைக்குமாறு காங்கிரஸ் கட்சியினரை அதிகாரிகள் கேட்டுகொண்டிருந்தனர். இதனிடையே சிலையை வேறு இடத்துக்கு மாற்றும் நடவடிக்கையில் கட்சியினர் ஈடுபட்டுவந்தனர்.

இந்தநிலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த நேரு சிலையின் பீடத்தின் மீது மோதியது. இதில் நேரு சிலை உடைந்து சேதமானது. இதில் கார் டிரைவர் திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை (38) என்பவர் காயம் அடைந்தார். அவரை அப்பகுதியினர் மீ்ட்டு உடனடியாக பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காங்கிரஸ் கட்சியினர்  சம்பவ இடத்தில் திரண்டனர். பின்னர் அவர்கள், திட்டமிட்டே நேரு சிலையை உடைத்து சேதப்படுத்திவிட்டனர் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பூந்தமல்லி போக்குவரத்து  புலனாய்வு போலீசாரும் நசரத்பேட்டை போலீசாரும் வந்து காங்கிரஸ்  கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், ‘’வேறு இடத்தில் நேரு சிலையை அமைத்து தர வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம்’ என்று கூறினர். ‘’சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று போலீசார் கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: