மேட்டூர் அருகே சர்க்கரை நோயால் அவதி; 2 மகள்களை ஆற்றில் தள்ளி கொன்று தம்பதி தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது

அந்தியூர்: சர்க்கரை நோய் பாதிப்பால் 2 மகள்களை பாலாற்றில் தள்ளி கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி மேற்கு தெரு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் (41). எலக்ட்ரானிக்ஸ் கம்பெனியில் பணிபுரிந்தார். இவரது மனைவி வான்விழி (31). டைல்ஸ் கடையில் வேலை செய்தார்.

இவர்களுக்கு நித்திக்‌ஷா (7), அப்சரா (3) என்ற 2 மகள்கள் இருந்தனர். இவர்களில், மூத்த மகள் நித்திக்‌ஷாவுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மகளுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இளைய மகள் அப்சரா கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது அவருக்கும் சர்க்கரை நோய் இருப்பது உறுதியானது. இதனால் விரக்தியடைந்த பெற்றோர், மகள்களை அழைத்து கொண்டு கடந்த 26ம் தேதி வெளியே சென்றனர். அதன்பின், வீடு திரும்பவில்லை.

இதையறிந்த யுவராஜின் தம்பி சதீஷ் கண்ணா (39) அதிர்ச்சியடைந்து, அண்ணன் குடும்பத்தை பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து, சேலம் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மகள்களுடன் மாயமான தம்பதியை தேடினர்.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி பாலாற்று பகுதியில் 4 பேரின் உடல் கிடப்பதாக பர்கூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், யுவராஜ் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், தனது 2 மகள்களுக்கும் சர்க்கரை வியாதி வந்ததால் அவர்களை மருத்துவம் பார்த்து காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. யாரும் தவறாக நினைக்க வேண்டாம் மன்னித்து கொள்ளுங்கள். இதனால், தற்கொலை செய்து கொள்கிறோம்’ என எழுதப்பட்டிருந்தது.

Related Stories: