சிவகிரி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்

*இரண்டு மான் கொம்புகள் பறிமுதல்

சிவகிரி : சிவகிரி அருகே காட்டுப் பன்றியை வேட்டையாடிய மூன்று பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஒப்பனையாள்புரம் கிராமத்தில் உள்ள பெரிய குளம் கண்மாய் அருகில் சிலர் நாட்டு வெடிகுண்டு வைத்து மான், பன்றி, முயல் வேட்டையாடி வருவதாக நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வனச்சரகர் மவுனிகா, தலைமையில் சிவகிரி வடக்கு பிரிவு வனவர், அசோக்குமார், தெற்கு பிரிவு வனவர் சந்தோஷ் குமார், வனக்காப்பாளர்கள் முகமது அலி, சன்னாசி, வனகாவலர்கள் ஆனந்தன், மாரியப்பன், வேட்டை தடுப்பு காவலர்கள் சரவணன், குரு ஆகியோர் தனிக்குழுவாக அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் காட்டுப்பன்றி வேட்டையாடிய ஒரு கும்பலை வனத்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இதை தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒப்பனையாள்புரம் நடுத்தெருவை சேர்ந்த சின்ன இசக்கி மகன் பெரிய முருகன் (48), மாடன் மகன் கடற்கரை (60), இந்திராகாலனி சங்குபுரம் வீரன் மகன் பால்துரை (37) ஆகியோர் என்பது தெரிய வந்தது.

இவர்கள் நாட்டு வெடிகுண்டு வைத்து காட்டுப் பன்றியை வேட்டையாடியதும் தெரியவந்தது. அவர்களிடம் இரண்டு மான் கொம்பு கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு நெல்லை மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் முருகன் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

The post சிவகிரி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.

Related Stories: