நாடு முழுவதும் மருத்துவமனைகளில் கொரோனா ஒத்திகை: டெல்லியில் ஒன்றிய அமைச்சர் ஆய்வு

புதுடெல்லி: நாடு முழுவதும் மருத்துவமனைகளில் நேற்று கொரோனா ஒத்திகை நடந்தது. டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டார். சீனாவில் பி.எப்.7 என்ற பெயரில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் தாக்கம் உலக நாடுகளுக்கும் பரவி விட்டது. தினமும் லட்சக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பி.எப்.7 ரக கொரோனா இந்தியாவிலும் ஏற்கனவே தலைகாட்டி விட்டது. குஜராத், மேற்குவங்கம், ஒடிசாவில் இந்த தொற்று பாதித்தவர்கள் கண்டறியப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இந்தியாவில் மீண்டும் ஒரு கொரோனா பேரிடர் நிகழாதவாறு தடுக்க ஒன்றிய அரசு தயாராகி வருகிறது.

இது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முடுக்கி விட்டு உள்ளது. புதியவகை தொற்று கண்டறியப்பட்ட நாடுகள் உள்பட வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை நடத்த அறிவுறுத்தி உள்ளது. சர்வதேச விமான நிலையங்களில் இந்த பரிசோதனை வேகமடைந்து இருக்கிறது. மேலும் நாடு ழுமுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனாவை எதிர்கொள்ள தேவையான வசதிகள் குறித்து முழு ஒத்திகை நடத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டு இருந்தது. அந்த ஒத்திகை நேற்று நடந்தது. டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் நடந்த ஒத்திகையை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதே போல் அனைத்து மாநிலங்களிலும் இந்த சோதனை நடந்தது. அப்போது தனிமைப்படுத்தும் படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கை வசதி, ஐசியூ படுக்கை, வென்டிலேட்டர் படுக்கை உள்ளிட்ட அனைத்து வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.

Related Stories: