லூதியானா: பஞ்சாப் மாநிலத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு கடந்த 17ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் லூதியானா மாவட்டம் கில் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், நேற்று மலோர்கோட்லா சாலை அருகே உள்ள வசித்ரா நகர் பகுதியில் ஆம் ஆத்மி கட்சியினர் பிரம்மாண்டமான வெற்றி ஊர்வலம் நடத்தினர்.
அப்போது ஒரு வீட்டிலிருந்து திடீரென வெளியே வந்த 10 முதல் 15 பேர் கொண்ட கும்பல், ஊர்வலத்தை நோக்கிச் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டது. சுமார் 20 முதல் 25 சுற்றுகள் வரை சுடப்பட்டதில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டக் குழு உறுப்பினர் ரவீந்தர் சிங் மற்றும் அக்கட்சித் தொண்டர் குர்முக் சிங் உட்பட 3 பேர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தத் தாக்குதல் குறித்து ஆம் ஆத்மி கட்சியினர் கூறுகையில், ‘தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் ஜஸ்பீர் சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர்’ என்று குற்றம் சாட்டியுள்ளனர். சம்பவ இடத்திலிருந்து தோட்டாக்களைக் கைப்பற்றியுள்ள போலீசார், தப்பியோடிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறி வருவது அங்குப் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
