பாணாவரம் அருகே வாலிபர் பலியான சம்பவம் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்-2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

பாணாவரம் : பாணாவரம் அருகே பைக் விபத்தில் வாலிபர் பலியானார். இந்நிலையில் சேதமான சாலை பகுதியை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே உள்ளது ஆயல் கிராமம். இங்குள்ள காவேரிப்பாக்கம்- சோளிங்கர் சாலை ஏரிக்கரை பகுதியில் கடந்த 1 ஆண்டுக்கு முன் கடும் மழை காரணமாக, தார் சாலை தீடீரென  சாலையோர கிணற்றுக்குள் சரிந்து விழுந்து  சாலை கடும் சேதமானது.

    இந்நிலையில், சோளிங்கர் தாலுக்கா கிருஷ்ணாபுரம், ராமானுஜம் நகரை சேர்ந்த  தனியார் கம்பெனி சூப்பர்வைசர் தனசேகர்(35) தன்னுடைய மனைவியை அழைத்து வர நேற்று முன்தினம் பைக்கில்  பாணாவரம் ரயில் நிலையம் சென்றபோது, ஏற்கனவே சேதமான சாலை பகுதியில் எதிரே வந்த பைக் மீது  மோதிய விபத்தில் பலியானார்.  இதுதொடர்பாக, பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 இந்நிலையில், ஆயல் பகுதி பொது மக்கள் 100க்கும் மேற்பட்டோர், ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன், ஒன்றிய குழு உறுப்பினர் வேண்டா சரவணன் ஆகியோர் தலைமையில்  சேதமான சாலையை சீரமைக்க கோரி நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சோளிங்கர்- காவேரிப்பாக்கம் சாலையில்  2 கிலோமீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து, தகவலறிந்த பாணாவரம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் லிங்கேஸ்வரன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இன்னும் 5 நாட்களுக்குள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின்பேரில், மறியலை கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பதிக்கப்பட்டது.

Related Stories: