இன பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து இலங்கை அதிபர் ரணிலுடன் ஜன.5ம் தேதி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை..!!

கொழும்பு: இலங்கையில் இன பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அதிபர் ரணில் விக்ரமசிங்கே உடன் ஜனவரி 5ம் தேதி தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாக அதன் எம்.பி.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை சுதந்திரம் பெற்று அடுத்த பிப்ரவரி மாதத்துடன் 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு அதனை சிறப்பாக கொண்டாட அதிபர் ரணில் திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்பாக இலங்கையில் நீண்ட காலமாக தொடரும் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண விரும்புவதாக நாடாளுமன்றத்தில் பேசிய அவர், தமிழ் அமைப்புகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அழைப்பு விடுத்தார்.

மேலும் எதிர்கட்சிகளுடன் நடத்திய அனைத்துக்கட்சி கூட்டத்திற்கும் அவர்களை அழைத்து விவாதித்தார். இந்த நிலையில் தமிழர்களின் முக்கியமான கோரிக்கைகள் குறித்து அதிபர் ரணிலுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர், நேற்றும் பேச்சுவார்த்தை நடத்தியதாக அதன் எம்.பி. சுமந்திரன் தெரிவித்துள்ளார். அப்போது தமிழர்களின் நிலங்களை கைப்பற்றிய ராணுவத்திடம் இருந்து அவற்றை மீட்கவும், அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும், தமிழர் பகுதிகளில் சிங்கள கொடியேற்றம், காணாமல் போனவர்களின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக கூறிய அவர், இந்த ஆலோசனையில் ராணுவ தளபதி பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்போது தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களை திரும்ப ஒப்படைப்பது தொடர்பாக ஜனவரி 3ம் தேதி கூடும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலிடம் ஒப்புதல் பெற சம்மதித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து 5ம் தேதி அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் சந்தித்து பேசவிருப்பதாக சுமந்திரன் கூறியுள்ளார். ஆனால் இது தமிழர்களை ஏமாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியே என மற்றொரு எம்.பி. தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சனைக்கு தீர்வு காண தென்னிலங்கை அரசியல் வாதிகள் சம்மதிக்கவில்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை சிதைக்கும் முயற்சியில் ரணில் ஈடுபட்டிருப்பதாக சாடியுள்ள அவர், தமிழர் தலைவர்களிடம் ஒற்றுமை வந்தாலே ஒழிய, எந்த தீர்வும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

Related Stories: