அனுமதியின்றி கட்டுமான பணி தெலங்கானா அரசுக்கு ரூ.900 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

திருமலை: அனுமதியின்றி கட்டுமான பணிகளை மேற்கொண்ட தெலங்கானா அரசுக்கு ரூ.900 கோடி அபராதம் விதித்து சென்னை தேசிய பசுமை  தீர்ப்பாயம் நேற்று உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா மாநில அரசு பாலமுரு- ரங்காரெட்டி மற்றும் திண்டி நீர்பாசன திட்டங்கள் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல துறைகளின் அனுமதிகள் பெறாமல் தொடர்ந்து கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு செய்வதாக ஆந்திர மாநில அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தமிழகம் சென்னை கிளை இந்த நீர்பாசன திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டில் 1.5 சதவீதம் என ரூ.900 கோடி தெலங்கானா மாநில அரசுக்கு அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கியது. சுற்றுச்சூழல் அனுமதியின்றி திட்டத்தை கட்டியதற்காக தெலங்கானாவுக்கு ரூ.300 கோடியும், பாலமுரு- ரங்காரெட்டி திட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ரூ.528 கோடியும், திண்டி திட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ரூ.92.8 கோடியும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையை 3 மாதங்களுக்குள் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தொகையை கிருஷ்ணா நதி மேலாண்மை வாரியத்திடம் டெபாசிட் செய்ய வேண்டும். பாலமுரு- ரங்காரெட்டி திட்டத்தை மேற்பார்வையிட ஒன்றிய அரசு அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: