முட்டாளை கண்டறிந்த பிறகு சிஇஒ பதவியில் இருந்து விலகுவேன்: எலான் மஸ்க் சர்ச்சை டிவிட்

வாஷிங்டன்: உலகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் சமூக வலைதளமான டிவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக மாறினார். இதனை தொடர்ந்து அவ்வப்போது அவர் பரபரப்பை ஏற்படுத்தும் தகவல்களை வெளியிட்டு வருகிறார். ஞாயிறன்று, தான் டிவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் தொடரலாமா? அல்லது வேண்டாமா? என்பது குறித்து டிவிட்டரில் வாக்கெடுப்பு நடத்தினார். வாக்கெடுப்பு முடிவுகளுக்கு கட்டுப்படுவதாகவும் உறுதி அளித்து இருந்தார். இதனை தொடர்ந்து ஞாயிறு மாலை தொடங்கிய வாக்களிப்பு திங்களன்று மாலை வரை நடந்தது. இதில் சுமார் 1.7கோடி பேர் பங்கேற்றனர். இதில் 57.5 சதவீதம் பேர் எலான் மஸ்க் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக ஆதரவு அளித்து வாக்களித்து இருந்தனர். இது தொடர்பாக மஸ்க் உடனடியாக எதுவும் குறிப்பிடவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் எலான் மஸ்க் தனது டிவிட்டர் பதிவில்,‘‘இந்த வேலையை எடுத்து கொள்ளும் அளவுக்கு முட்டாள் ஒருவரை கண்டறிந்த பின், எனது பதவியில் இருந்து விலகுவேன். அதன் பின் மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்களை மட்டும் கவனித்துக்கொள்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இது தற்போது சர்ச்சையாகி வருகிறது.

Related Stories: