மருதம் ஊராட்சியில் ரூ.10.19 லட்சத்தில் அங்கன்வாடி மையம்: சுந்தர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில்  மருதம் ஊராட்சி உள்ளது. இங்குள்ள அங்கன்வாடி மையம் சிதலமடைந்து எந்த நேரத்திலும் விழும் சூழல் நிலவியது. அங்கன்வாடி மையம் குறித்து கிராம மக்கள் ஒன்றிய நிர்வாகத்திடம் தெரிவித்தனர். அதன்படி அங்கன்வாடி மையத்தை ஆய்வு மேற்கொண்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், நிதி ஒதுக்கி புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும் ஒன்றிய பொதுநிதியிலிருந்து ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம் கட்டி முடிக்கப்பட்டது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.விழாவிற்கு ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் கலந்துகொண்டு அங்கன்வாடி மைய கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போது, கிராம மக்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அதற்கு கிராம மக்கள், சிறு தரைப்பாலம், சாலைகள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அரசு பஸ் வசதி போன்றவை ஏற்படுத்தித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.  

இதை கேட்ட எம்எல்ஏ, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பேசி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில், ஒன்றியக்குழு துணை தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர்கள் சஞ்சய்காந்தி, உலகநாதன், மருதம் திமுக கிளை செயலாளர் பழனி, முன்னாள் ஊராட்சி தலைவர் இளஞ்செழியன், ஊராட்சி வார்டு உறுப்பினர் ராமு மற்றும் திமுக நிர்வாகிகள், கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: