ரஷ்யா - உக்ரைன் போரில் மத்தியஸ்தம் கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லை பிரச்னை பற்றி மோடி பேசாதது ஏன்?.. சிவசேனா தலைவர் கேள்வி

மும்பை: கர்நாடகா-மகாராஷ்டிரா எல்லை பிரச்னை பற்றி மோடி பேசாதது ஏன்? என்று சிவசேனா தலைவர் கேள்வி எழுப்பி உள்ளார். சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னாவில் ரோக்தோக் என்ற தனது வாராந்திர கட்டுரையில் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எழுதியிருப்பதாவது:  மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா இடையேயான எல்லைப் பிரச்னை மனித நேயத்திற்கான போராட்டம் அல்ல. இது இரு மாநில மக்களுக்கும் அரசுகளுக்கும் இடையிலான சண்டையும் அல்ல. மராத்தி மொழி பேசும் மக்கள்தொகை கணிசமான அளவு இருப்பதால், வடக்கு கர்நாடகாவில் உள்ள பெலகாவி மற்றும் அதைச் சுற்றியுள்ள எல்லைப் பகுதிகள் மீது மகாராஷ்டிரா நீண்ட காலமாக உரிமை கொண்டாடி வருகிறது.

மகாராஷ்டிராவில் உள்ள சாங்கிலி மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததால் கர்நாடகாவுடன் இணைக்குமாறு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சமீபத்தில் கூறினார். இதனை அடுத்து பல ஆண்டுகளாக நிலவும் எல்லை தகராறு மீண்டும் பூதாகரமாக எழுந்தது. ரஷ்யா-உக்ரைன் போரில் பிரதமர் மோடி மத்தியஸ்தம் செய்கிறார். ஆனால் மகாராஷ்டிரா-கர்நாடகா எல்லைப் பிரச்சனையில் கண்ணை மூடிக்கொள்கிறார். இது ஒரு நல்ல அரசியல்வாதியின் அடையாளம் அல்ல.  இவ்வாறு சஞ்சய் ராவத் குறிப்பிட்டுள்ளார்.

*இருமாநில பேரவை இன்று கூடுகிறது

கர்நாடக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவி சுவர்ண விதானசவுதாவில் இன்று தொடங்கி வரும் 30ம் தேதி வரை விடுமுறை நாட்கள் கழித்து பத்து நாட்கள் நடக்கிறது.  இதில், கர்நாடகா-மகாராஷ்டிரா இடையே எல்லை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர். இதேபோல், மகாராஷ்டிரா சட்டப்பேரவையும் நாக்பூரில் இன்று கூடுகிறது. 

Related Stories: