மதுரையில் ஜூன் மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

அவனியாபுரம்: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் 2023 ஜூன் மாதம் மதுரையில் நடைபெறும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார். மதுரை, அவனியாபுரத்தில் நுகர்பொருள் மொத்த வியாபாரிகள் சங்க 69வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.  

விழாவில் சிறப்பு விருந்தினராக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு பேசியதாவது:

வியாபாரிகள் சங்கம் பொதுநல சேவையாக தினமும் 500 பேருக்கு இலவச மருத்துவ சேவை வழங்குவது பாராட்டிற்குரியது. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வியாபாரிகள் சங்கத்தினர் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை குறித்து நான் முதல்வரிடம் பேசி ஏற்பாடுகளை மேற்கொள்வேன். மதுரைக்கான வளர்ச்சி திட்டங்கள் எதுவும் 10 ஆண்டுகளாக நடைபெறவில்லை என கூறியுள்ளனர்.

இதுதொடர்பான திட்டங்களை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் டைடல் பார்க் உள்பட வேலை வாய்ப்பிற்கான பல்வேறு தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வரும் 2023 ஜூன் மாதம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது. இதில் வணிகர்களின் பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்திட துணை நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: