நெல்லை காங்கிரஸ் தலைவர் சாவில் மர்மம் நீடிப்பு ; தோட்டத்தில் கருகிய நிலையில் டார்ச் லைட் சிக்கியது:மாயமான அன்று காரில் 43 கி.மீ சுற்றியதாக தகவல்

நெல்லை:  உவரி அருகே தோட்டத்தில் காங்கிரஸ் தலைவர் எரித்து கொல்லப்பட்டதாக கூறப்படும் வழக்கில் மர்மம் நீடிக்கிறது. தோட்டத்தில் கருகிய நிலையில் ஒரு டார்ச் லைட் சிக்கியுள்ளது. மேலும் மாயமான அன்று அவர் 43 கி.மீ. தூரம் காரில் சுற்றியதாகவும் தகவல் வெளியானது.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் தனசிங், கடந்த 4ம் தேதி காலை திசையன்விளை அடுத்த கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் எழுதிய மரண வாக்குமூலம் என்ற 2 கடிதங்களின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் 10 தனிப்படையும் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. 9 நாட்களை கடந்தும் இவ்வழக்கில் மர்மம் நீடிக்கிறது. இந்நிலையில் தனிப்படை எண்ணிக்கை 5 ஆக குறைக்கப்பட்டது.

இறந்தது ஜெயக்குமார் தனசிங் இல்லை என்ற அவரது குடும்பத்தினரின் சந்தேகத்தின் பேரில் அவரது மகனிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகளும், சம்பவ இடத்தில் நடந்த தடயவியல் அறிக்கை விவரங்களும் வெளியாகாத நிலையில், சில தினங்களுக்கு முன்பு தோட்டத்து கிணற்றில் கத்தி கண்டெடுக்கப்பட்டது. இந்த கத்தியும் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தொடர்ந்து தனிப்படை குழுவினர், ஜெயக்குமார் சடலமாக கிடந்த தோட்டத்தை சல்லடை போட்டு அலசி தடயங்கள் எதுவும் கிடக்கிறதா? என்று தேடினர். இதில் அவர் மாயமான 2ம் தேதி திசையன்விளை சூப்பர் மார்க்கெட்டில் வாங்கிய டார்ச் லைட் கருகிய நிலையில் கிடைத்தது. இந்த டார்ச் லைட், அவர் வாங்கியது தானா? என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.ஜெயக்குமார் மாயமான 2ம் தேதி இரவு 2 மணி நேரம் காரில் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றிரவு தோப்புவிளை பகுதியில் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இது அவரது சொந்த ஊரான கரைசுத்துபுதூரில் இருந்து 15 கிமீ ஆகும். முன்னதாக காரில் திசையன்விளை, மன்னார்புரம், அணைக்கரை, பெருங்குளம், உறுமன்குளம், பெட்டைக்குளம், அணைக்குடி, குட்டம் வழியாக 43 கிமீ சுற்றி தோப்புவிளையை அடைந்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மன்னார்புரம் பங்க்கில் பெட்ரோல் நிரப்பிய அவர், 15 கிமீ தொலைவில் உள்ள ஊருக்கு ஏன் இவ்வளவு தூரம் சுற்றிச் சென்றார் என்பது புரியாத புதிராக உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொல்லப்பட்டது ஜெயக்குமாரா? குடும்பத்தினர் புதிய சந்தேகம்
எரிந்த நிலையில் சடலமாக கிடந்தது கேபிகே ஜெயக்குமார் தனசிங் தானா? என்ற சந்தேகத்தை அவரது குடும்பத்தினர் தொடர்ந்து எழுப்பி வருவதால், கொல்லப்பட்டது அவர் தானா? என்ற கோணத்திலும் விசாரணையை உளவுத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். ஜெயக்குமாருக்கு கடன்கள் ஏராளமாக இருந்ததால், சினிமா பாணியில் தலைமறைவாகி விட்டு வேறொருவரை எரித்து இதுபோன்று நாடகத்தில் ஈடுபட்டிருக்கலாமா என உளவுத்துறையினர் சந்தேகிக்கின்றனர். இப்பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் சுற்றித்திரிகின்றனர். அவரது உடல் அமைப்பை ஒத்தவரை தேர்வு செய்து கடத்தி கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு பின்னர் உடலை எரித்து இருக்கலாம் என்றும், இதனை ஜெயக்குமார் கொல்லப்பட்டது போன்று நாடகத்தை அரங்கேற்றி இருக்கலாம் என்ற அடிப்படையிலும் 2 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே ஓரிரு நாளில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

தென்காசி எஸ்பியும் விசாரணை
தென்காசி மாவட்ட எஸ்பி சுரேஷ்குமாரும், ஜெயக்குமாரின் தோட்டத்தில் வேலை செய்யும் ஒருவரிடம் நேற்று விசாரணை நடத்தினார். அவர் அளித்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசாரும் இவ்வழக்கில் விசாரணையை துவங்கி உள்ளனர். கைப்பற்றப்பட்ட சில தடயங்களை அறிவியல் பூர்வமான சோதனைக்கும் உட்படுத்தி இருக்கின்றனர்.

The post நெல்லை காங்கிரஸ் தலைவர் சாவில் மர்மம் நீடிப்பு ; தோட்டத்தில் கருகிய நிலையில் டார்ச் லைட் சிக்கியது:மாயமான அன்று காரில் 43 கி.மீ சுற்றியதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: