கூகுள் மேப்பை நம்பி முட்டுச்சந்துக்குள் சென்றதால் விபரீதம் வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய மும்பை பெண் கைது: 2 பெண்களுக்கு எலும்பு முறிவு, 5 பேர் படுகாயம்

சென்னை: கூகுள் மேப்பை நம்பி மகாராஷ்டிரா மாநில பெண் ஒருவர் முட்டுச்சந்துக்குகள் காரை இயக்கியதால் வீட்டு வாசலில் தூங்கிய 2 பெண்களுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும் இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்தனர். விசாரணையின் இறுதியில் வாகனத்தை இயக்கிய அந்த பெண், குடிபோதையில் இருந்தது தெரியவந்தது.

சென்னை அசோக்நகர் 10வது தெருவை சேர்ந்தவர் சரிதா. இவர் வீட்டில் நேற்று முன்தினம் சுப நிகழ்ச்சி நடந்தது. இதற்காக வெளியூர்களில் இருந்து வந்த இவரது உறவினர்கள் சிறிய வீடு என்பதால் 7 பேர் மட்டும் வீட்டின் முன்பு வாசலில் படுத்து தூங்கினர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு கார் ஒன்று வீட்டு வாசலில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த 7 பேர் மீது சடசடவென ஏறியது. இதனால் தூங்கிக் கொண்டிருந்த 4 பெண்கள் உட்பட 7 பேரும் படுகாயமடைந்து வலி தாங்க முடியாமல் அலறி துடித்தனர்.

இதனிடையே விபத்தை ஏற்படுத்திய கார், நிற்காமல் செல்லவே அங்கிருந்தவர்கள் காரை துரத்திச் சென்றனர். அப்போது அதிர்ஷ்டவசமாக சாலையின் முட்டுச்சந்தில் கார் வேகமாக செல்ல முடியாதவாறு நின்றுவிட்டது. உடனே பொதுமக்கள் காரை இயக்கிய பெண்ணை பிடித்து அடிக்கப் பாய்ந்தனர். ஆனால் அவர், காரின் கண்ணாடியை திறக்காமல் அதிர்ச்சியில் அமர்ந்துவிட்டார்.

தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, படுகாயமடைந்த 4 பெண்கள் உட்பட 7 பேரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் காயம் அடைந்த 7 பேரில் சரிதா மற்றும் பிள்ளைநாயகி ஆகிய 2 பேருக்கு மட்டும் இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சொகுசு காரை இயக்கி வந்தது மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த வைஷாலி (41) என்றும், இவர் சென்னை அசோக்நகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தபோது வழி தெரியாததால், ‘கூகுள் மேப்’ மூலம் அசோக் நகர் 10வது தெரு வழியாக சென்றதாகவும், அப்போது இந்த விபத்து நடந்ததும் தெரியவந்தது. கூகுள்மேப் தவறாக வழிகாட்டியதால் இந்த விபத்து நடந்தது என்றும், வேண்டுமென்றே இந்த விபத்தை ஏற்படுத்தவில்லை என்றும் வைஷாலி போலீசாரிடம் கூறினார்.

இதைத்தொடர்ந்து போலீசார் வைஷாலியை கைது செய்து பரிசோதனைக்கு உள்ளாக்கினர். இதில் அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வைஷாலி மீது மதுபோதையில் வாகனம் இயக்கியது தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கூகுள்மேப் தவறாக வழிகாட்டியதால், வீட்டு வாசலில் தூங்கிய 7 பேர் மீது கார் ஏறி இறங்கிய சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கூகுள் மேப்பை நம்பி முட்டுச்சந்துக்குள் சென்றதால் விபரீதம் வீட்டு வாசலில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய மும்பை பெண் கைது: 2 பெண்களுக்கு எலும்பு முறிவு, 5 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: