அருப்புக்கோட்டை நகராட்சியில் ரூ.50 லட்சத்தில் பூங்காக்களை புதுப்பிக்கும் பணி: சாய் நகர் மற்றும் மாணிக்கம் நகரில் புதிய பூங்காக்கள்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் ரூ.50 லட்சத்தில் பூங்காக்களை புதுப்பிக்கும் பணி விரைவில் தொடங்கும் என நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் தெரிவித்துள்ளார். மேலும், நகரில் உள்ள சாய் நகர் மற்றும் மாணிக்கம் நகரில் புதிய பூங்காக்கள் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை நகராட்சி வளர்ந்து வரும் நகராக உள்ளது.

இந்த நகரைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தனியார் மில்கள் மற்றும் சிறுகுறு தொழில்கள் அதிகளவில் உள்ளன. கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க அருப்புக்கோட்டைக்கு வந்து செல்கின்றனர். நகரில் பள்ளி, கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன.

இந்நிலையில், நகரில் உள்ள பொதுமக்கள், சிறுவர்கள் பொழுதுபோக்கும் வகையில் நகராட்சி சார்பில் அஜிஸ் நகர், நேதாஜி ரோடு, ரயில்வே பீடர் ரோடு, வசந்தம் நகர், கணேஷ் நகர் ஆகிய இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பூங்காவும் தலா ரூ.20 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள், செயற்கை நீருற்றுகள், காலை மாலை நேரங்களில் ரேடியோ மூலம் செய்தி, சினிமா பாடல்கள் ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டன. பொதுமக்களுக்கு பயன்பட்டு வந்த பூங்காக்கள் போதிய பராமரிப்பு இன்றி செடி, கொடிகள் வளர தொடங்கின. சிறுவர்களின் விளையாட்டு சாதனங்கள் உடைந்து கிடக்கின்றன. பொதுமக்கள் அமரும் இருக்கைகள் உடைந்தன. இதனால், பொதுமக்கள் பூங்காவுக்கு வருவதை தவிர்த்தனர்.  

நகரில் உள்ள 5 பூங்காக்களில் அஜிஸ் நகர் பூங்கா மட்டும் செயல்பட்டு வந்தது. அதுவும் தற்போது பராமரிப்பின்றி செயல்பாடில்லை. இப்பகுதி மக்களுக்கு பொழுதுபோக்கு இடமாக பூங்கா இருந்து வந்தது; மற்ற பூங்காக்கள் பொதுமக்கள் பயன்பாட்டில்லை. முற்றிலும் சேதமடைந்த நிலையில் பராமரிப்பின்றி உள்ளது. பொதுமக்கள் பொழுது போக்குவதற்கு போதிய இடங்கள் இல்லை. பொதுமக்கள் பூங்காக்கள் எப்போது செயல்படும் என எதிர்பார்த்து தினசரி வந்து செல்கின்றனர். இந்நிலையில், அருப்புக்கோட்டை நகராட்சியை திமுக கைப்பற்றிய பின்னர் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்படி நகரில் உள்ள பூங்காக்களையும் புதுப்பிக்க முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.  

இது குறித்து நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி சிவப்பிரகாசம் கூறியதாவது: அஜிஸ் நகர், நேதாஜி ரோடு, ரயில்வே பீடர் ரோடு, வசந்தம் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 பூங்காக்களையும் புதுப்பிக்க 50 லட்சம் நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. மேலும் மாணிக்கம் நகரில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலும், சாய் நகரில் ரூ.35 லட்சத்திலும் புதிய பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், தெற்குத் தெருவில் புதிய பூங்கா அமைக்கதிட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள் புதுப்பிக்கும் பணி விரைவில் துவங்கி அதற்கான பணிகள் முழுமையாக முடிவடைந்ததும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: