கும்மிடிப்பூண்டி அருகே பழிக்கு பழியாக எதிரிகளை கொலை செய்ய திட்டமிட்டவர் கைது: 2 கிலோ கஞ்சா, 6 பட்டாக்கத்தி பறிமுதல்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே அண்ணன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை பழிக்கு பழியாக கொலை செய்ய திட்டமிட்டு, கூலிப்படையினருக்கு பட்டாக்கத்தி வழங்கிய வாலிபரை நேற்றிரவு போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அருகே புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி, புதுப்பேட்டை பகுதியில் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் வந்து செல்வதாக சிப்காட் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீவிரமாக கண்காணித்தனர்.

இந்நிலையில், புதுப்பேட்டை பகுதியில் சந்தோஷ் என்பவரின் வீட்டுக்குள் சந்தேக நிலையில் ஆட்கள் சென்று வருவதை போலீசார் கண்காணித்தனர். பின்னர் அந்த வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து, அங்கிருந்த கிருஷ்ணா (36) என்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, 6 பட்டாக்கத்திகளை பறிமுதல் செய்தனர். பின்னர் கிருஷ்ணாவை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், கிருஷ்ணாவின் அண்ணன் சம்பத் என்பவரை ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியில் 7 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்துள்ளனர். அதற்கு பழிக்கு பழியாக, அண்ணன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கூலிப்படை வைத்து கொலை செய்வதற்கு திட்டமிட்டு, அவர்களுக்கு பட்டாக்கத்திகளை வழங்கி, எதிரிகளை கண்காணித்து வந்ததாக கிருஷ்ணா வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.  

இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்வதற்கு திட்டமிட்டு பட்டாக்கத்தியுடன் சுற்றி திரிந்த கிருஷ்ணாவை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவர் குறிப்பிட்ட கூலிப்படையினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories: