வருசநாடு அருகே நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை; மூல வைகையாறு, சின்னச்சுருளி, யானைகெஜம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: விவசாயிகள் மகிழ்ச்சி

வருசநாடு: தேனி மாவட்டம் வருசநாடு, வெள்ளிமலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மூல வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதே போல் மேகமலை, ஹைவேவிஸ்  நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் சின்னச்சுருளி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர் மழையால் தேனி மாவட்டத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தேனி மாவட்டம் வருசநாடு, வெள்ளிமலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது தொடர்ந்து சாரலாக மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த 2 நாட்களாக வருசநாடு அருகே உள்ள மூல வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது மூல வைகையாற்றின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.

தொடர் மழை காரணமாக மேகமலை அடிவாரத்தில் கோம்பைத்தொழு வடக்கு மலைபகுதியில் உள்ள சின்னச்சுருளி அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த அருவிக்கு திண்டுக்கல், மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும். தற்போது அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி அருவிக்கு செல்வோர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதே போல் வருசநாடு அருகே உப்புத்துறை மலை அடிவாரத்தில் உள்ள யானைகெஜம் அருவியிலும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பைகள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்துள்ளார்களா என பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அனுமதிக்கப்படுகின்றனர்.

வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று தினங்களில் உப்புத்துறை மாளிகைப்பாறை கருப்பசாமி கோயில் மற்றும் புது கருப்பசாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் இந்த யானைகெஜம் அருவியில் புனித நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அமாவாசை நாட்களில் இந்த அருவிக்கு வரும் பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து, காக்கைக்கு உணவு படைத்து விட்டு,  புனித நீராடி செல்கின்றனர்.

தற்போது அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாலும், இப்பகுதி அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மூல வைகையாறு, அருவிகள் மற்றும் கண்மாய்களுக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளதால் தேனி மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Related Stories: