பீகார் சட்டப்பேரவை தேர்தலை தேஜஸ்வி தலைமையில் சந்திப்போம்: முதல்வர் நிதிஷ் அறிவிப்பால் பரபரப்பு

பாட்னா: வரும் 2025ம் ஆண்டு நடக்க இருக்கும் பீகார் சட்டப்பேரவை தேர்தலை தேஜஸ்வி யாதவ் தலைமையில் எதிர்கொள்வோம் என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் அறிவித்தார். பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம், காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. நிதீஷ்குமார் முதல்வராக இருக்கிறார். துணை முதல்வராக லாலுபிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளார்.  நேற்று பீகாரில் ஆளும் கூட்டணி எம்எல்ஏக்கள் பங்கேற்ற கூட்டத்தில் முதல்வர் நிதீஷ்குமார் பேசும் போது,’ 2025 பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணிக்கு துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தலைமை தாங்குவார்.

நான் பிரதமர் வேட்பாளரும் இல்லை, முதல்வர் வேட்பாளரும் அல்ல. பா.ஜ.வை தோற்கடிப்பதே எனது இலக்கு. எங்களைப் பிரிக்க நினைத்தால் அது நடக்காது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுங்கள். உரசல்கள் இருக்கக் கூடாது. தேஜஸ்வி இங்கே இருக்கிறார். நான் அவரை முன்னெடுத்துச் செல்ல என்ன செய்ய முடியுமோ அதை நான் செய்தேன், நான் அவரை இன்னும் மேலே கொண்டு செல்வேன். நீங்கள் அனைவரும் எல்லாவற்றையும் பார்த்து புரிந்துகொள்வீர்கள்.  நான் சொல்வதைக் கேளுங்கள். இது என்னுடைய  தனிப்பட்ட பார்வை மட்டும் அல்ல. ஏனெனில் நாம் என்ன செய்தாலும்  காந்தியின் வழியைப் பின்பற்ற வேண்டும்’ என்று பேசினார்.

Related Stories: