செய்யாறு போலீசில் நாளுக்கு நாள் குவிகிறது தீபாவளி பண்ட் நடத்தி 21 கோடி மோசடி: 3 நாட்களில் 170 பேர் புகார்

செய்யாறு: தீபாவளி பண்ட் நடத்தி ரூ.21 கோடி மோசடி நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 3 நாட்களில் 170 பேர் புகார் செய்துள்ளனர். இதனால் செய்யாறு போலீசில் நாளுக்கு நாள் புகார்கள் குவிந்து வருகிறது. சிட்பண்ட் நடத்திய உரிமையாளரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள ஒரு சிட்பண்ட் நிறுவனம் கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு தீபாவளி சிட்பண்ட் நடத்தி வந்தது. இதனை நம்பிய செய்யாறு மற்றும் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முகவர்கள் மூலம் பணம் கட்டியுள்ளனர். ஆனால் அறிவித்தபடி அந்த நிறுவனம், தீபாவளி பரிசு பொருட்கள் விநியோகிக்க முடியாததால் வாடிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர். முகவர்களுக்கும் நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் அந்த நிறுவனம், கடந்த 10ம் தேதிக்குள் பணம் ெகாடுப்பதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்துள்ளது. ஆனால் கூறியபடி பணம் தரவில்லை. மேலும் செய்யாறு நகரில் பாவாடை மூர்த்தி விநாயகர் கோயில் தெருவில் உள்ள அந்த நிறுவனத்தின் மற்றொரு அலுவலகம் மூடப்பட்டது. இதையறிந்த முகவர்கள் மற்றும் பொதுமக்கள் கடந்த 10 மற்றும் 11ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த போலீசார், புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் போலீசார் அறிவுறுத்தலின்பேரில் செய்யாறு போலீசில் முகவர்கள் புகார் செய்து வருகின்றனர். அதன்படி கடந்த 10, 11, 12 ஆகிய 3 நாட்களில் மட்டும் 170 முகவர்கள் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின்பேரில் சுமார் 21 கோடியே 6 லட்சத்து 70 ஆயிரம் வரை தனியார் நிறுவனம் மோசடி செய்ததாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து முகவர்கள், பொதுமக்கள் புகார் கொடுத்து வருகின்றனர். இதனால் தொகை அதிகரிக்கலாம் என தெரிகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: