நாமக்கல்லில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவக்கம்-15,290 பேருக்கு கற்றுத்தர 800 தன்னார்வலர்கள் நியமனம்

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் எழுத, படிக்க தெரியாத 15 வயதுக்கு மேற்பட்ட 15,290 பேருக்கு எழுத, படிக்க கற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 800 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வசிக்கும் அனைவருக்கும் தமிழில் எழுத படிக்க தெரியும் என்ற நிலையை உருவாக்க, புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

ஒன்றிய அரசின் நிதி உதவியுடன், மாநில அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. தமிழகத்தில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் மூலம், புதிய பாரத எழுத்தறிவு திட்டம், 5 ஆண்டு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், 15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்க தெரியாதவர்களுக்கு, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வி வழங்கப்படுகிறது. மாநிலத்தின் எழுத்தறிவு சதவீதத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை உருவாக்கும் நோக்கிலும், புதிய வயது வந்தோர் கல்வித் திட்டம் 38 மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது.

 இந்த திட்டம் மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற வார்டுகள், கிராமங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேல், சுமார் 15,290 பேர் எழுத, படிக்க தெரியாதவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடிப்படை கல்வியை கற்பிக்க, மாவட்டம் முழுவதும் சுமார் 800 தன்னார்வலர்கள் உள்ளனர். அவர்களுக்கு வட்டார அளவில் 45 ஆசிரியர் பயிற்றுனர்கள், பயிற்சி அளிக்க உள்ளனர்.

இந்த திட்டம் குறித்து ஆசிரியர் பயிற்றுனர்கள் செல்வராணி, ரேவதி, துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கவுள்ள ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள்.

 இந்நிலையில், நாமக்கல் மாவட்ட திட்ட அலுவலகத்தில் மாவட்ட அளவிலான பயிற்சி நேற்று நடைபெற்றது. ஒருங்கிணைந்த பள்ளிகல்வி, உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:

மாவட்டத்தில் 15 வயதுக்கு மேல் எழுத, படிக்க தெரியாத அனைவருக்கும் எழுதவும், படிக்கவும் தன்னார்வலர்கள் பயிற்சி அளிக்கவேண்டும். மாலை நேரத்தில் அரசு பள்ளிகள், 100 நாள் வேலை நடைபெறும் இடங்கள், கோயில் அருகாமையில் என இடங்களை தேர்வு செய்து, கற்பவர்களை வரவழைத்து தினமும் 2 மணி நேரம் பயிற்சி அளிக்கவேண்டும். இதற்கு தன்னார்வலர்களை தயார்படுத்தவேண்டும். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றி வரும் தன்னார்வலர்களையும் இதில் இணைத்து கொள்ளலாம். வயதானவர்களை மிகவும் பொறுமையுடன் கையாண்டு, அவர்களுக்கு எழுத, படிக்க செய்யவேண்டும். இதன் மூலம் குறிப்பிட்ட வளர்ச்சியை அடைய முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

5 ஆண்டு திட்டமாக செயல்படுகிறது

கடந்த ஆண்டு கற்போம், எழுதுவோம் என்ற திட்டம், ஓராண்டு திட்டமாக மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டது. இதற்கு நல்ல முன்னேற்றம் கிடைத்தாலும், மாவட்டம் முழுவதும் இந்த திட்டத்தை கொண்டு செல்லமுடியவில்லை. ஒவ்வொரு வட்டாரத்திலும் குறிப்பிட்ட சில பள்ளிகளில் தான், அந்தந்த பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் தன்னார்வலர்கள் பாடம் நடத்தினர். தற்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய பாரத எழுத்தறிவு திட்டம், 5 ஆண்டு திட்டமாக செயல்படுத்தப்படுகிறது. ஆண்டுதோறும் கற்பவர்களின் எண்ணிக்கை இதன் மூலம் மாறுபடும். தொடர்ந்து திட்டம் நடைமுறையில் இருப்பதால், திட்டத்தின் பயன் அதிகரிக்கும். இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரி செய்திருந்தார்.

Related Stories: