வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஜூடோ விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முட்டுக்கட்டை

*குறைதீர்வு நாளில் மாணவர்கள் கோரிக்கை மனு

வேலூர் :  ஜூடோ விளையாட்டு போட்டிகளில் போதிய பயிற்சி பெற்றிருந்தும் உயர்மட்ட அளவிலான போட்டிகளில்  பங்கேற்க வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் இடைஞ்சல் ஏற்படுத்துவதாக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்வு  நாள் கூட்டத்தில் ஜூடோ விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மனு அளித்தனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நேற்று காலை 10.30 மணி அளவில் தொடங்கியது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஜூடோ விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வேலூர் மாவட்ட ஜூடோ சங்க நிர்வாகிகளுடன் வந்து அளித்த மனுவில், ‘வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளில் ஜூடோ விளையாட்டில் மாணவ, மாணவிகள் அனைத்து நிலை போட்டிகளிலும் கலந்து கொண்டு சாதனை படைத்து வருகின்றனர். பள்ளிக்கல்வித்துறை மூலம் வட்டாரம், வருவாய் மற்றும் கல்வி மாவட்டம், மாநில, தேசிய அளவிலான போட்டிகளிலும், கல்லூரி கல்வி இயக்குனரகம் மூலம் நடத்தப்படும் போட்டிகளிலும், மாநில ஜூடோ சங்கம் மூலம் நடத்தப்படும் போட்டிகளிலும் கலந்து கொண்டு சாதனை படைத்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இத்தகைய சாதனை மாணவ, மாணவிகள் மருத்துவம், தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் 2019-20ம் ஆண்டுக்கான மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டியில் வேலூர் ஆக்சீலியம் கல்லூரி மாணவி ஜனனி 2ம் இடம் பிடித்துள்ளார். இவரை போன்றே பலரும் கேலோ இந்தியா, மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளிலும் மாணவ, மணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இவர்களில் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் ஐடிசி போட்டிகளில் ஜூடோ மாணவர்களும் கலந்து கொள்ள ேகட்டு அணுகிய போது  எடுத்த உடனே உங்கள் ஜெயிக்க முடியாது என்று கூறி அனுமதி மறுக்கின்றனர். எனவே, உரிய அங்கீகாரத்துடன் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்து இருந்தனர்.

அதேபோல் கரிகிரி கிராமத்தை சேர்ந்த நரிக்குறவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். தொடர்ந்து வேலூர் நகரின் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 22 மாணவ மாணவிகள் மாநில அளவிலான அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகளில் கலந்து கொண்டதற்காக மதியம் 12.30 மணியளவில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அலுவலகம் வந்த கலெக்டரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

 ெதாடர்ந்து இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம், வி.சி. கட்சியை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளித்தனர். இதுதவிர இக்கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உட்பட பல்வேறு நல திட்டங்கள் கோரி பொதுமக்கள் மனு அளித்தனர். தொடர் மழையின் காரணமாக நேற்று நடந்த மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் குறைந்த அளவிலேயே மக்கள் வந்திருந்தனர்.

Related Stories: