கோத்தகிரியில் சாரல் மழையுடன் கடும் பனி மூட்டம்-சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

கோத்தகிரி : கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு காட்சி முனையை காண வந்த சுற்றுலா பயணிகள் காலநிலை மாற்றம் காரணமாக கடும் பனிமூட்டம் சாரல் மழை பெய்து வரும் நிலையில் காட்சி முனையை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மிகச்சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக கோடநாடு காட்சி முனை விளங்குகிறது. இதனை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலும் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வார விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது வழக்கம்.

இயற்கை அழகில் இங்கு அமைந்துள்ள ஆழமான பள்ளத்தாக்குகள், ராக் பில்லர், பச்சை பசேல் என காட்சியளிக்கும் அடர்ந்த வனப்பகுதிகளையும், பழங்குடியினர் கிராமங்கள் மற்றும் தெங்குமரஹாடா, கல்லம்பாளையம் உள்ளிட்ட  குக்கிராமங்களையும், தமிழகத்தின் முக்கிய அணைகளில் ஒன்றான பவானிசாகர் அணை மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலத்தின் குண்டல்பேட், அங்களா உள்ளிட்ட பகுதிகளையும் கண்டு ரசித்து செல்வர்.

இந்நிலையில், வார விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை புரிந்திருந்த நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக கோடநாடு பகுதியில் அதிக மழையின் காரணமாக கடும் பனிமூட்டத்துடன், கடும் குளிர் நிலவி சாரல் மழை பெய்து வரும் காரணத்தினால்  கோடநாடு காட்சி முனையில் உள்ள ராக்பில்லர், பவானி சாகர் அணை காட்சி, ஆழமான பள்ளத்தாக்குகள், தமிழகம், கர்நாடகா ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிகள் ஆகியவற்றை கண்டுகளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர்.

இதுக்குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில்,``கோடநாடு காட்சி முனையில் நிலவும் காலநிலையை அனுபவிக்க நாங்கள் இங்கு வந்து பெரும் ஏமாற்றத்துடன் செல்கிறோம். கடும் குளிர், சாரல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் எங்களது சுற்றுலா பயணம் எதிர்பார்த்த அளவிற்கு திருப்தி கரமாக இல்லை’’ என்றனர்.தொடரந்து மழையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கோடநாடு காட்சி முனைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்வதால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படும் நிலை ஏற்பட்டது.

வாகன ஓட்டிகள் அவதி

கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளான கட்டபெட்டு, கோடநாடு, கீழ் கோத்தகிரி, ஒரசோலை, சோலூர்மட்டம், எஸ்.கைக்காட்டி, கூக்கல்தொரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பனிமூட்டத்துடன்  கடும் குளிர் நிலவி வந்தது.நேற்று காலை முதல் மிதமானது முதல்  சாரல் மழையானது பெய்து வந்த  நிலையில் சாலைகள், நகர்புற குடியிருப்பு பகுதிகளில் கடும்  பனிமூட்டத்துடன், குளிரும் நிலவியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.தொடர் மழை காரணமாக நகர்புற பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

பனிமூட்டம் காரணமாக சுற்றுலா வாகன ஓட்டிகள், சாலையோர வியாபாரிகள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம், குன்னூர், உதகை மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள சாலைகளில் கடும் மேகமூட்டம் காணப்பட்டதால் பகல் நேரங்களிலேயே வாகனங்களின் முகப்பு விளக்குகள், இருபுற திசை விளக்குகள் எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கி செல்லும் நிலையும் ஏற்பட்டு இருந்தது.

Related Stories: