தமிழ் பாரம்பரியம் மீது ஈர்ப்பால் வெளிநாட்டு தம்பதி மீண்டும் டும்…டும்…

தரங்கம்பாடி: தமிழ் பாரம்பரியம் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக திருக்கடையூரில் தமிழ் முறைப்படி வெளிநாட்டு தம்பதி திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு உறவினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். யிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புகழ்பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மட்டும் தான் சஸ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம், பூரணாபிஷேகம் மற்றும்ஆயுள் ஹோமங்கள் நடைபெறுகின்றன. பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோயிலுக்கு தினமும் பல்வேறு மாநிலம், மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டினரும் வருகை தந்து சாமி வழிபாடு செய்கின்றனர்.

இந்நிலையில் கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த நிமித்தி-ஏலேனா தம்பதிகள் ஏற்கனவே கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்திருந்தாலும், தமிழ் பாரம்பரியத்தின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி இந்துமத திருமண முறைப்படி திருமணம் செய்ய அந்த தம்பதியினர் திருக்கடையூருக்கு வருகை தந்தனர். இதனை தொடர்ந்து கோயில் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அந்த தம்பதியினர், பட்டு வேட்டி, பட்டு சேலை அணிந்து மணமகன்- மணமகள் கோலத்தில் மலர்மாலை மாற்றிக் கொண்டு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சென்று விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி, முருகன் உள்ளிட்ட சன்னதியில் சாமி வழிபாடு செய்தனர். வெளிநாட்டினர் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டதை பார்த்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

The post தமிழ் பாரம்பரியம் மீது ஈர்ப்பால் வெளிநாட்டு தம்பதி மீண்டும் டும்…டும்… appeared first on Dinakaran.

Related Stories: