கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் படித்த மாணவி: வருகை பதிவேட்டில் பெயர் வந்தது எப்படி என விசாரணை

திருவனந்தபுரம்: இந்தியாவில் நீட் நுழைவுத்தேர்வு எழுதி பாஸ் ஆனால் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்க முடியும். ஆனால் கேரளாவில் ஒரு மாணவி நீட் தேர்வில் வெற்றி பெறாமலேயே 4 நாள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகியுள்ளது.

கேரளாவில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் வகுப்புகள் கடந்த நவம்பர் 29ம் தேதி தொடங்கியது. கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு 245 மாணவர்கள் தேர்வாகியிருந்தனர்.

இவர்கள் அனைவரும் முதல் நாளிலேயே ஆஜராகி இருந்தனர். ஆனால் கூடுதலாக ஒரு மாணவியும் வகுப்பில் கலந்து கொண்டு படித்து வந்தார். அந்த மாணவியின் பெயர் வருகை பதிவேட்டிலும் இருந்தது. நவம்பர் 29ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை 4 நாட்கள் இவர் மற்ற மாணவர்களைப் போல வகுப்புகளில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவக் கல்லூரி அதிகாரி மாணவர்களின் வருகை பதிவேடு மற்றும் அனுமதி பதிவேட்டை ஒப்பிட்டுப் பார்த்தபோது ஒரு மாணவி கூடுதலாக வகுப்புகளில் கலந்து கொண்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் புகார் தெரிவித்தார்.  இந்த விவரம் வெளியான அன்று முதல் அந்த மாணவி கல்லூரிக்கு வரவில்லை.

இது குறித்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். தகுதி இல்லாத அந்த மாணவியின் பெயர் ஆஜர் பதிவேட்டில் வந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்த கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே அந்த மாணவி தன்னுடைய பேஸ்புக், வாட்ஸ் ஆப் உள்பட சமூக இணையதளங்களில் தான் மருத்துவக் கல்லூரி வகுப்புகளில் இருப்பது போன்ற போட்டோக்களை எடுத்து பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: