சித்தூரில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றபோது சோகம் பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து பெண்கள் உட்பட 6 பேர் பலி

*24 பேர் படுகாயம்

சித்தூர் : சித்தூரில் திருமண நிகழ்ச்சிக்காக சென்றபோது டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 24 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஐராலா அடுத்த பலீஜாப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஹேமந்த். இவருக்கும் பூதலப்பட்டு அடுத்த ஜெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருக்கும் நேற்று அதிகாலை புவனேஸ்வரி வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் ஐராலா அடுத்த பலீஜாப்பள்ளி கிராமத்தில் இருந்து டிராக்டரில் 30 பேர் திருமணம் நடைபெறும் ஜெட்டிப்பள்ளி கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். தவனம்பள்ளி அடுத்த லட்சுமையா கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த 5 அடி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே பெண்கள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 24 பேர் படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தவனம்பள்ளி போலீசார் அங்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்தவர்களை திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கும், வேலூர் தனியார் மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கலெக்டர் முருகன் ஹரி நாராயணன், எஸ்பி நிஷாந்த், ஆர்டிஓ ரேணுகா, எம்ஆர்ஓ பார்வதி உள்ளிட்ட  அதிகாரிகள் சித்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்த  குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘இந்த விபத்தில் தவனம்பள்ளி அடுத்த தெள்ளகுண்டளப்பள்ளி கிராமத்தை சேர்ந்த தேஜஸ், அவரது 2 மகள்களான வினி, ஜென்சிகா ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். ஐராலா அடுத்த மோடகாம்பள்ளி கிராமத்தை சேர்ந்த டிராக்டர் டிரைவர் சுரேந்திரா, அதேபகுதியை சேர்ந்த வசந்தம்மா, மணமகனின் பெரியம்மா ரெட்டியம்மா(31) ஆகியோரும் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயமடைந்தனர்.’ என்றனர். திருமண நிகழ்ச்சிக்காக சென்றபோது டிராக்டர் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்தது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories: