மூணாறு அருகே குடியிருப்பு பகுதிகளில் புலி,சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க சிசிடிவி கேமரா

கூடலூர் : தமிழக-கேரள எல்லையோரப் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களில் வனவிலங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டு யானை, காட்டு மாடு, சிறுத்தை, கரடி, புலி உள்ளிட்ட அனைத்து வனவிலங்குகளும் மக்கள் வசிக்கும் பகுதிக்குள்ளும் குறிப்பாக விவசாய நிலங்களை நோக்கியும் வர துவங்கி விட்டன.

 கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே அடிமாலி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட தலமாலி, அம்பளிகுன்று, பெட்டிமுடி பகுதிகளில் கடந்த 3 நாட்களாக, புலி புலிகள் நடமாட்டம் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து கூம்பன்பாறை வனச்சரக அலுவலகத்தின் கீழ் பகுதியான அம்பிளிக்குன்று பகுதிகளில் நேற்று காலை புலியின் கால்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த 2 நாட்களாக, அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த நாய்களை காணவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

புலிகளின் கால் தடம் காணப்பட்டதை அடுத்து, வனச்சரக அலுவலர் ஜோஜி ஜேம்ஸ் தலைமையில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து புலியின் கால்தடங்கள் இருந்த பகுதியில் புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. மேலும் வனத்துறை அதிகாரி பினோஜ் தலைமையில் வனத்துறையினர் மற்றும் அடிமாலி விரைவுப்படையினர் சம்பவ இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். கண்காணிப்பு கேமராவில் புலி இருப்பது கண்டறியப்பட்டால் மட்டுமே, புலியை பிடிக்க கூண்டு அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இப்பகுதியில் புலிகள் தென்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு வனத்துறையினர் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளனர். தலைமுறைகளாக இங்கு வசித்தாலும் காட்டுப்பன்றிகள், குரங்குகள் தவிர வேறு எந்த தொந்தரவும் இல்லை எனவும்,  இதே நிலை நீடித்தால் இரவு நேரங்களில் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே புலி உள்ளிட்ட வன விலங்குகளின் தொல்லையை தடுக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டதால் இப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து மலைக்கிராம மக்கள் கூறுகையில், பகல்நேரத்திலேயே புலி, சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. குறிப்பாக, ஒத்தையடி பாதையில் நடந்து செல்லும் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளிடம் இருந்து தப்பித்து செல்வதே பெரும்பாடாக உள்ளது.

மேலும் மாலை 6 மணிக்கு மேல் மலைக்கிராமத்திற்கு பொதுமக்கள் யாரும் செல்வதில்லை. இதன் காரணமாக வீடுகளுக்கு தேவையான அரிசி, பருப்பு, கடலை எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க கூட சிரமமாக உள்ளது. எனவே, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து சிறுத்தை, புலிகளை கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதிக்குள் விட வேண்டும், என்றனர்.

சிறுத்தையும் அடிக்கடி ‘விசிட்’

கடந்த சில மாதங்களுக்கு முன், கேரள மாநிலம் பழைய மூணாறில் தேயிலை தோட்ட பகுதியில் ஷீலா ஷாஜி உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதிக்கு வந்த புலியை கண்டதும், அனைவரும் அலறியடித்து ஓடினர். அவர்களை விரட்டிய புலியிடம் ஷீலா சிக்கி கொண்டார். புலி ஷீலாவின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்க முயன்றபோது, அவரின் அலறல் சத்தம் கேட்டு புலி மீண்டும் காட்டுக்குள் ஓடியது.

புலியின் தாக்குதலில் காயமடைந்த மயங்கி விழுந்த ஷீலாவை, சக ஊழியர்கள் உடனடியாக மூணாறில் உள்ள டாடா ஹை ரேஞ்சு மருத்துவமனையில் அனுமதித்தனர். பெண் தொழிலாளியை புலி தாக்கியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபோல், கடந்த சில மாதங்களுக்கு முன் விவசாயி ஒருவரை சிறுத்தை தாக்க முயன்றபோது, அவர் தற்காப்புக்காக கத்தியால் சிறுத்தையை ெகான்ற சம்பவமும் நடந்தது.

Related Stories: