மது பாட்டிலை உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்து விமானத்தை பாராக மாற்றிய தூத்துக்குடி பயணியால் பரபரப்பு: பணிப்பெண்களிடம் நடுவானில் ரகளை


சென்னை: டெல்லியிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் 132 பயணிகளுடன் சென்னை வந்து கொண்டிருந்தது. அதில் தூத்துக்குடியை சேர்ந்த இசக்கியப்பன் (30) என்பவரும் பயணம் செய்தார். இவர் டெல்லியில் தனியார் நிறுவன ஊழியர். விடுமுறைக்காக சொந்த ஊர் செல்ல வந்தார். விமானம் நடுவானில் பறந்தபோது, இசக்கியப்பன் தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மது பாட்டிலை எடுத்து, தண்ணீர் கலந்து குடிக்க தொடங்கினார். இவரின் இந்த செயலுக்கு சக பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் இசக்கியப்பன் அதைப்பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். உடனடியாக இதுகுறித்து சக பயணிகள், விமான பணிப்பெண்களிடம் புகார் செய்தனர். அவர்கள் இசக்கியப்பனை கடுமையாக கண்டித்ததோடு அவரிடம் இருந்த மதுபாட்டிலையும் பறிமுதல் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த இசக்கியப்பன் பணிப்பெண்களிடம் வாக்குவாதம் செய்தார். ‘‘சர்வதேச விமானங்களில் நீங்களே குடிப்பதற்கு மது கொடுக்கிறீர்கள். ஆனால் உள்நாட்டு விமானத்தில் நாங்கள் கொண்டு வந்து குடிப்பதற்கு அனுமதி கிடையாதா’’ என்று வாதம் செய்தார். இதனையடுத்து பணிப்பெண்கள் தலைமை விமானியிடம் புகார் அளித்தனர். பின்னர் விமானம் சென்னையில் தரையிறங்கியதும், சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி இசக்கியப்பனை கீழே இறக்கி, அவரை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், டெல்லியில் விமானத்தில் ஏறும்போதே இசக்கியப்பன் இந்த மதுபாட்டிலை தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு விமானத்தில் ஏறியதும், அதன் பின்பு விமானம் நடுவானில் பறக்கத் தொடங்கியதும் இவருக்கு பக்கத்து இருக்கை காலியாக இருந்ததால் துணிச்சலாக விமானத்துக்கு உள்ளேயே மது அருந்தியதும் தெரிய வந்தது. இதனையடுத்து இசக்கியப்பன் போலீசாரிடம் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டார். அதன் பின்பு போலீசார் இசக்கியப்பனை கடுமையாக எச்சரித்து, எழுதி வாங்கிக்கொண்டு விசாரணைக்கு தேவைப்பட்டால் மீண்டும் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவித்தனர்.

The post மது பாட்டிலை உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்து விமானத்தை பாராக மாற்றிய தூத்துக்குடி பயணியால் பரபரப்பு: பணிப்பெண்களிடம் நடுவானில் ரகளை appeared first on Dinakaran.

Related Stories: