மக்களால் 19 மாதங்களுக்கு முன்பே நிராகரிக்கப்பட்ட எடப்பாடிக்கு பதில் சொல்ல விரும்பவில்லை: தென்காசி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சென்னை: மக்களால் 19 மாதங்களுக்கு முன்பே நிராகரிக்கப்பட்ட எடப்பாடிக்கு பதில் சொல்ல  விரும்பவில்லை என தென்காசியில் நடந்த அரசு விழாவில் ரூ.239 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க.  ஸ்டாலின் பேசினார். தென்காசி மாவட்டம் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று காலை நடந்தது. கலெக்டர் ஆகாஷ் வரவேற்றார். ரூ.34.14 கோடி மதிப்பில் 23 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.22.20 கோடி மதிப்பில் 11 முடிவுற்ற பணிகளை  திறந்து வைத்தும், ரூ.182.56 கோடி மதிப்பில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 508 பேருக்கு நலத்திட்ட உதவிகள் என ரூ.239 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

தென்காசி மாவட்டத்துக்கு வந்ததுமே, இந்த மண்ணைப் போலவே மனதும் குளிர்ச்சி அடைந்து விடுகிறது.

இது என்ன அரசு விழாவா அல்லது எங்கள் கட்சியினுடைய மாநில மாநாடா என்று சந்தேகப்படக்கூடிய அளவிற்கு பெரிய எழுச்சி. மிகப்பெரிய அளவில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றால், இந்த நிகழ்ச்சியில், வழங்கப்பட கூடிய தொகையும் மிகப் பெரியதாக அமைந்திருக்கிறது. ரூ.22 கோடியே 20 லட்சம் மதிப்பிலான 57 முடிவுற்ற திட்டப் பணிகளை மக்களுடைய பயன்பாட்டுக்காக துவக்கி வைத்துள்ளேன். ரூ.34 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில், 23 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 508 பேர் பயனடையும் வகையில் ரூ.182 கோடியே 56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. ஒரே ஒரு விழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைய இருக்கின்றன என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன். திமுக ஆட்சி மலர்ந்து 19 மாத காலங்களில் பல நூறு சாதனைகளை தமிழகத்துக்கு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னதாக, தென்காசி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் சில என்னிடம் தெரிவிக்கப்பட்டன. உடனடியாக அதிகாரிகளை அழைத்து நான் பேசினேன்.

அவைகள் சிலவற்றை நிறைவேற்றித் தருவதற்கான அறிவிப்பை இந்த மேடையிலேயே சொல்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தென்காசி - குற்றாலம் இடையே உள்ள இலத்தூர் பெரிய ஏரி ஒரு முக்கிய மீன்பிடி மற்றும் சுற்றுலாத்தலமாக ரூ.10 கோடி செலவில் மேம்படுத்தப்படும். ஒவ்வொருவருடைய தேவைகளையும் கேட்டுக் கேட்டு, ஒவ்வொரு பகுதியின் பிரச்னையையும் அறிந்து, அறிந்து  நிறைவேற்றித் தரும் அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதனைப்  பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர், “திமுக ஆட்சிக்கு வந்ததும் எந்த சாதனையையும் செய்யவில்லை, எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சில மாதங்கள் வரைக்கும், விடுபட்ட சில வாக்குறுதிகளை மட்டும் எடுத்து  வைத்துக் கொண்டு  “இதை நிறைவேற்றவில்லை, அதை நிறைவேற்றவில்லை” என்று  சொல்லிக் கொண்டு இருந்தார். சொல்லிக்கொண்டு இருந்தார் என்று சொல்லக்கூடாது,  புலம்பிக்  கொண்டிருந்தார். அதையும் நாம் நிறைவேற்றியதும் - என்ன சொல்லுவது  என்று தெரியாமல் எதையுமே நிறைவேற்றவில்லை என்று ஒரே வரியில் சொல்லி இருக்கிறார். பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டு விட்டதாக நினைக்குமாம். அதுபோல எதிர்க்கட்சித்  தலைவர் நினைத்துக் கொண்டு இருக்கிறார். இவர் வேண்டுமென்றால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கலாம். ஆனால், தமிழகத்து மக்கள் 19 மாதத்துக்கு முன்பே  விழித்துவிட்டார்கள்.

இருண்ட காலத்தை முடித்து  வைத்து, உதயசூரியனின் காலத்தை உருவாக்கி விட்டார்கள். எனவே, மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களின் எரிச்சல் வார்த்தைகளுக்கெல்லாம் நான் விரிவாக பதில் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் சொன்ன வாக்குறுதிகள் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கே நேரம் கிடைக்கவில்லை. ஏதோ அரசியலில் தாங்களும் இருக்கிறோம் என்று காட்டுவதற்காக நம்மை பற்றி விமர்சிக்கிறார்கள். ஆனால் எங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கு நாங்கள் உண்மையாக இருக்கிறோம். உணர்வுப் பூர்வமாக  உழைக்கிறோம். தமிழகத்தை இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக ஆக்குவது  ஒன்றுதான் என்னுடைய குறிக்கோள். இவ்வாறு முதல்வர் மு பேசினார். விழாவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* மக்கள் வெள்ளத்தில் மிதந்த மு.க.ஸ்டாலின்

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக தென்காசி வந்தார். வழக்கமாக வெளியூர் பயணங்கள் என்றால் விமானம் மற்றும் கார் மூலம் செல்லும் முதல்வர் நேற்று முதன் முறையாக தென்காசிக்கு ரயில் மூலம் வருகை தந்தார்‌. இதனால், தொண்டர்கள் உற்சாகம் அடைந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். ரயில் நிலையம் துவங்கி குற்றாலம் வரையும், குற்றாலம் சுற்றுலா மாளிகையில் துவங்கி விழா நடைபெற்ற இடம் வரை பல இடங்களில் திமுக சார்பில் வரவேற்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

செண்டை மேளம், வாடிப்பட்டி மேளம், கரகாட்டம், ஒயிலாட்டம், குதிரைகள், ராட்சத பலூன் என களை கட்டி காணப்பட்டது. பெண்களும் மாணவ மாணவியரும் குழந்தைகளும் திரண்டு நின்று கொடுத்த வரவேற்பில் நெகழ்ச்சி அடைந்த முதல்வர் விழாவில் பேசும் போது அவற்றை வெளிப்படுத்தினார். கூடியிருந்த கூட்டத்தினரை பார்த்து சாதாரணமாக குற்றாலத்தில் இருந்து மைதானத்திற்கு வருவதற்கு 15 நிமிடங்கள் ஆகும். ஆனால் மக்கள் கொடுத்த வரவேற்பின் காரணமாக கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் எடுத்துக் கொண்டதாகவும், வரவேற்பினால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்ததாக கூறினார்.

Related Stories: