போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற வங்கதேச இளைஞர் கைது: சென்னை விமான நிலையத்தில் அதிரடி

சென்னை: சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட்டில், மலேசியாவுக்கு செல்ல முயன்ற வங்கதேச இளைஞரை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். மேல் நடவடிக்கைக்காக அவரை சென்னை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, மலேசிய  தலைநகர் கோலாலம்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், நேற்று அதிகாலை புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பினர். அப்போது, மேற்குவங்க மாநில, முகவரி பாஸ்போர்ட்டுடன் பிபுல் மண்டல் (35) என்பவர், இந்த விமானத்தில் மலேசியாவிற்கு செல்ல வந்தார். ஆனால் குடியுரிமை அதிகாரிகளுக்கு, அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவரது பாஸ்போர்ட்டை நவீன கருவி மூலம் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பாஸ்போர்ட் போலி பாஸ்போர்ட் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பயணியின் பயணத்தை ரத்து செய்த குடியுரிமை அதிகாரிகள், அவரை தனி அறையில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவருடைய பெயர் விபுல் மண்டல். ஆனால், அவர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்ல. வங்கதேசத்தை சேர்ந்தவர். இந்தியாவுக்குள் ஊடுருவி கொல்கத்தா சென்றுள்ளார். அங்கு போலி பாஸ்போர்ட் தயார் செய்து கொடுக்கும் ஏஜென்ட்களை அணுகி, பெருமளவு பணம் கொடுத்து இந்திய பாஸ்போர்ட் வாங்கியது தெரியவந்தது. அதன்பின்னர், அவர் கொல்கத்தாவில் இருந்து ரயிலில் சென்னை வந்து, சென்னையில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் மலேசியாவிற்கு செல்ல முயன்றது தெரிய வந்தது. பிறகு, குடியுரிமை அதிகாரிகள் வங்கதேச பயணியை கைது செய்தனர்.

அதோடு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். கொல்கத்தாவில் போலி பாஸ்போர்ட் வாங்கிவிட்டு சென்னைக்கு வந்து, இங்கிருந்து விமானத்தில் மலேசியா செல்ல முயன்றது ஏன், சென்னையில் அவரது கூட்டாளிகள் யாராவது இருக்கிறார்களா என்று பல்வேறு கோணங்களில் விசாரித்தனர். தொடர்ந்து, மேல் நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து வந்து, போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற வங்கதேச பயணியை, தங்களுடைய பொறுப்பில் எடுத்துக்கொண்டு, சென்னையில் உள்ள அவர்கள் அலுவலகம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: