வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கலை அரசன், கலை அரசி விருது: செங்கல்பட்டு கலெக்டர் அறிவிப்பு

செங்கல்பட்டு: பள்ளி கல்வித்துறை சார்பில், செங்கல்பட்டு புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா போட்டி துவக்க விழா நேற்று நடந்தது. செங்கல்பட்டு கலெக்டர் ராகுல் நாத்   கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி  போட்டியை துவக்கிவைத்தார்.  அப்போது அவர் பேசுகையில், “மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப்பள்ளிகளில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் கலைத்திறனை வெளிகொணரும் விதமாகவும், பள்ளிக்கல்வி செயல்பாடுகளின் ஒரு பகுதியாக கலை பண்பாட்டு கொண்டாட்டங்களை ஒருங்கிணைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.  

தமிழகத்தின் பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் பண்பாடு குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ள இது வழிவகுக்கும். தற்போது நடைபெற உள்ள கலைத்திருவிழா போட்டிகளில் வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட 4,513 மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்குபெற உள்ளனர். மாவட்ட அளவில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் கலை அரசன், கலை அரசி விருதுகளும் வழங்கப்படும்” என்றார். விழாவில், செங்கல்பட்டு நகராட்சி நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Related Stories: