தென்கொரியா, அமெரிக்காவின் ‘வெப் சீரிஸ்’ பார்த்ததாக 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை: வடகொரியா அரசு அதிரடி

வாஷிங்டன்: தென் கொரியாவின் படங்களை பார்த்ததாக 2 சிறுவர்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனையை வடகொரியா அரசு நிறைவேற்றியுள்ளது. உலகின் மிகவும் மர்மமான நாடு வடகொரியா தான். அங்கு என்ன நடக்கிறது என்பது பற்றியோ அந்த நாட்டின் சட்ட திட்டங்கள் பற்றியோ வெளி உலகத்திற்கும் எதுவும் நிச்சயமாக தெரியாது. வெளிநாட்டு சினிமாக்களுக்கு தடை, தொலைக்காட்சிகளுக்கு தடை என பெரும் சர்வாதிகார ஆட்சியே நடக்கிறது.

அதுவும் நாட்டின் அதிபரான கிம் ஜாங் உன் உத்தரவும் அப்படித்தான். விதிகளை மீறினால் மிக கடுமையான தண்டனை விதிக்கப்படும். குறிப்பாக கடந்தாண்டு கிம் ஜான் உன்னின் தந்தை உயிரிழந்ததன் துக்கம் அனுசரிக்கப்பட்டது. மொத்தம் 11 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்ட நாட்களில் பொதுமக்கள் சிரிப்பதற்கு கூட தடை விதிக்கப்பட்டது. கடைகளுக்கு செல்லக் கூடாது. குடிக்க கூடாது என கட்டுப்பாடுகள் பலவகைகளில் விதிக்கப்பட்டன. இவற்றை மீறினால் அவ்வளவுதான். அந்த மாதிரிதான் வடகொரியாவில் கடுமையான சட்ட திட்டங்கள் பின்பற்றப்படுவதாக மேற்கத்திய நாடுகளின் ஊடகங்களும் தென்கொரிய உளவு அமைப்புகளும் சொல்கின்றன.

சீனாவுடன் மட்டுமே வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வடகொரியா, அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை, அணு ஆயுத சோதனைகளை செய்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை மிரட்டி வருகிறது. இதனால் அந்நாட்டில் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், நாட்டில் கடும் பஞ்சம், உணவுப்பொருள் தட்டுப்பாடு நிலவுவதாக கூட சொல்லப்படுகிறது.

அதைபற்றியயெல்லாம் எந்த செய்தியும் அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது இல்லை. இணையதளங்களுக்கு கூட கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அரசு அனுமதித்த இணையதளங்களுக்கு மட்டுமே செல்ல முடியும். அரசு சொல்லும் செய்திகள் மட்டுமே ஒளிபரப்பாகும். இப்படி பல கட்டுப்பாடுகள் உள்ளன. இதையும் மீறி வடகொரியாவின் அண்டை நாடும் பரம எதிரி நாடாகவும் உள்ள தென்கொரிய நாட்டு நாடகங்கள், சினிமாக்கள் வடகொரியாவில் பிரபலம் ஆகி வருகின்றன.

இதனால், தென்கொரிய டிராமா ஷோக்கள் ப்ளாஷ் டிரைவ் போன்ற கருவிகள் மூலமாக கடத்தல் முறையில் வடகொரியாவிற்குள் கொண்டு வரப்படுகின்றன. தண்டனையில் இருந்து தப்புவதற்காக யாருக்கும் தெரியாமல் பூட்டிய வீட்டிற்குள் இருந்து கொண்டு இத்தகைய வீடியோக்களை வடகொரிய மக்கள் பார்ப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒருவேளை வடகொரிய அரசு இதை கண்டுபிடித்தால் அபராதம், சிறை தண்டனை, ஏன் மரண தண்டனை விதித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. சமூக ஊடகங்களும் வடகொரியாவில் இல்லை என்பதால் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து வெளி உலகத்திற்கு தெரியாது. இப்படியான ஒரு சர்வாதிகார ஆட்சிதான் வடகொரியாவில் நடந்து வருகிறது.

இந்நிலையில், தென்கொரியா மற்றும் அமெரிக்காவின் படங்களை பார்த்ததற்காக 16 மற்றும் 17 வயதுடைய பள்ளி மாணவர்கள் 2 பேருக்கு மரண தண்டனையை வடகொரியா நிறைவேற்றியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கொரியாவின் மிக பிரபலமான தொடரான கே-டிராமாக்கள் பார்ப்பதற்கு வடகொரியாவில் தடை உள்ளது. அதையும் மீறி இந்த தொடர்களை பார்த்த குற்றத்திற்காக இருவருக்கும் பொது வெளியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த அக்டோபர் மாதமே இந்த சம்பவம் நடைபெற்று விட்டாலும் கடந்த வாரம்தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Related Stories: