மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் செங்கமலம் யானை குளிக்க ரூ.10 லட்சத்தில் நீச்சல் குளம்-டிஆர்பி ராஜா எம்எல்ஏ திறந்து வைத்தார்

மன்னார்குடி : மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் வளர்க்கப்படும் பாப் கட்டிங் புகழ் செங்கமலம் யானை குளித்து மகிழ ரூ.10 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தை டிஆர்பி ராஜா எம்எல்ஏ திறந்து வைத்தார்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவத்தலமான ராஜகோபால சுவாமி கோயிலில் கடந்த பல வருடங்களாக செங்கமலம் என்று அழைக்கப்படும் பெண் யானை வளர்க்கப்பட்டு வருகிறது. 34 வயதை கடந்த பாப் கட்டிங் புகழ் செங்கமலம் யானை கோயிலில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் பாகன் ராஜகோபால் வழிகாட்டுதலில் வலம் வந்து அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்து வருகிறது.

ஆயிரக்கணக்கான பக்தர்களின் செல்லப்பிள்ளையாக வலம் வரும் பாப் கட் டிங் செங்கமலம் யானை காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் குளிக்க வசதியாக கோயில் நிர்வாகம் ஏற்கனவே 75 ஆயிரம் ரூபாய் செலவில் ஷவர் வசதியை செய்து கொடுத்துள்ளது. இந்நிலையில், செங்கமலம் யானைக்கு கோயில் வளாகத்தில் நீச்சல்குளம் ஒன்று கட்டித்தர வேண்டும் என சட்டமன்ற மதிப்பீட்டு குழுத்தலைவர், மாநில திட்டக்குழு உறுப்பினர் டிஆர்பி ராஜா எம்எல்ஏ தொடர்ந்து கோரிக்கை விடுத்ததார். இதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு கடந்த சில மாதங்களுக்கு முன் யானை குளிப்பதற்கு நீச்சல் குளம் கட்ட உத்தரவிட்டிருந்தார்.

அதன் பேரில், கோயில் வளாகத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் செங்கமலம் யானை குளித்து மகிழ புதிதாக நீச்சல் குளம் அமைக்கப்பட்டது.இந்நிலையில், ராஜகோபால சுவாமி கோயிலில் நேற்று காலை நடந்த நிகழ்ச்சியில் தமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழுத்தலைவர், மாநில திட்டக் குழு உறுப்பினர் டிஆர்பி ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு செங்கமலம் யானை குளித்து மகிழ புதிதாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தை திறந்து வைத்தார்.

Related Stories: