வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதியில் ஜனவரி 2ம் தேதி சொர்க்க வாசல் திறப்பு: 5 லட்சம் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனtவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது. இதில், 5 லட்சம் பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

வைகுண்ட ஏகாதசியையொட்டி, 2ம் தேதி அதிகாலை 1 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படும். ஆகம முறைப்படி ஜீயர்கள் முன்னிலையில் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்படும். பிறகு அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை புரோட்டோகால் விஐபிக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். காலை 5 மணி முதல் இரவு ஏகாந்த சேவை வரை ஆன்லைனில் வழங்கப்படும். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், திருப்பதியில் வழங்கப்பட உள்ள சர்வ தரிசன இலவச டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்.

தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்வதற்கு டோக்கன்கள் வழங்கப்படும். ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகள் என வெளியிடப்படும். இதேபோல், சர்வ தரிசனம் இலவச டோக்கன்கள் திருப்பதியில் 9 கவுனடர்களிலும், திருமலையில் ஒரு கவுன்டரில் ஜனவரி 1ம் தேதி மதியத்தில் இருந்து வழங்கப்படும். ஒரு நாளைக்கு 50 ஆயிரம் டோக்கன்கள் வழங்கப்படும்.

இதனை பெற்றவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். டோக்கன் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்பட்டாலும், மொட்டை அடித்து கொண்டும், லட்டு பிரசாதம் வாங்கி கொண்டும் திருமலையில் உள்ள மற்ற பகுதிகளில் சுற்றி பார்க்கலாம்.  சிறப்பு முன்னுரிமை தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. வைகுண்ட ஏகாதசிக்காக சொர்க்கவாசல் வழியாக 10 நாட்களில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.

24 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் 63 ஆயிரத்து 931 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 34  ஆயிரத்து 813 பேர் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று முன்தினம் இரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.3.40 கோடி காணிக்கையாக கிடைத்தது.

நேற்று காலை முதல் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 10 அறைகள் பக்தர்களால் நிரம்பியது. இதனால், பக்தர்கள் 24 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர். ரூ.300 டிக்கெட் ெபற்ற பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Related Stories: