உலக கோப்பையில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி: பிரேசிலை பிரித்து மேய்ந்த கேமரூன்; போர்ச்சுகலுக்கு கொரியா ஷாக்

தோஹா: ஃபிபா உலக கோப்பை கால்பந்து தொடரின் ஜி பிரிவு லீக் ஆட்டத்தில், நம்பர் 1 அணியான பிரேசிலுக்கு அதிர்ச்சி தோல்வியை பரிசளித்த திருப்தியுடன் கேமரூன் வெளியேறியது. லீக் சுற்றின் கடைசி ஆட்டங்களில் நேற்று ஜி பிரிவில் செர்பியா - சுவிஸ், கேமரூன் - பிரேசில் அணிகள் மோதின. இந்த 4 அணிகளில் ஆப்ரிக்காவை சேர்ந்த  கேமரூன் அணிதான் தரவரிசையில் பின்தங்கி இருக்கிறது. ஆனாலும் கடைசி லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த பிரேசிலுக்கு தண்ணி காட்டியது. வழக்கம் போலவே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் அணி, பெரும்பான்மையான நேரம்  பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. கோல் முயற்சிக்கும் பஞ்சமில்லை.

ஆட்டம் முழுவதும் கேமரூன் கோல் பகுதியில்தான் பிரேசில் வீரர்கள் குடியிருந்தனர். அவர்களின் கோலடிக்கும் ஆசைக்கு கேமரூன் தற்காப்பு வீரர்களும், கோல்கீப்பர் எபாஸ்ஸியும் முட்டுக்கட்டை போட்ட வண்ணம் இருந்தனர். அதேபோல்  கேமரூன் அவ்வப்போது மேற்கொண்ட சில கோல் முயற்சிகளும் முதல் பாதியில் மட்டுமல்ல, 2வது பாதியிலும் பலன் தரவில்லை. அதனால் 90 நிமிடங்கள் கோலின்றி முடிந்தது. அதன் பிறகு இடையில் ஏற்பட்ட தாமதத்தை ஈடு செய்ய கூடுதலாக வழங்கப்பட்ட 9 நிமிடங்களில் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

பதிலி ஆட்டக்காராக களமிறங்கிய ஜெரோம் மெபகலி 92வது நிமிடத்தில் தட்டித் தந்த பந்தை, கோல் பகுதியில் இருந்த முன்கள வீரரும் கேப்டனுமான வின்சென்ட் அபூபக்கர் அழகாக தலையால் முட்டி கோலாக்கினார். கோல் அடித்த உற்சாகத்தில் அவர் தன் சட்டையை கழற்றி ஆரவாரம் செய்தார். அதனால் அவருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. ஏற்கனவே ஆட்டத்தின் 81வது நிமிடத்தில் அவர் ஒரு மஞ்சள் அட்டை பெற்றிருந்ததால், நடுவர் உடனடியாக சிவப்பு அட்டையை காட்டி அபூபக்கரை வெளியேற்றினார். அடுத்த 6 நிமிடங்களும் கேமரூன் 10 வீரர்களுடன் விளையாடினாலும் பிரேசிலால் கோலடிக்க முடியவில்லை. முடிவில் கேமரூன் 1-0 என்ற கோல் கணக்கில் பிரசேிலை வீழ்த்தியது.

இதே பிரிவில் செர்பியா - சுவிஸ் அணிகள் மோதிய ஆட்டத்தின் முதல் பாதியிலேயே 4 கோல்கள் விழுந்தன. சுவிஸ் தரப்பில் சாகிரி 20வது நிமிடத்திலும், எப்போலோ 44வது நிமித்திலும் கோல் அடித்தனர். செர்பியாவுக்கு மித்ரோவிச்  (26’), விலாகோவிச்  (35’) கோல் போட்டனர். 2வது பாதி ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில் சுவிஸ் வீரர் வர்காஸ் உருவாக்கி தந்த கோல் வாய்ப்பை  ரெமோ பிரூலர் சரியாக பயன்படுத்தி கோலடித்தார். விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் சுவிஸ் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை வசப்படுத்தியது. ஜி பிரிவில்  பிரசேில், சுவிஸ் அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றாலும், கோல் வித்தியாச அடிப்படையில் முறையே முதல் 2 இடங்களை பிடித்தன.  கேமரூன் (4), செர்பியா (1) வெளியேற்றப்பட்டன. நாக் அவுட் சுற்றில்  பிரேசில் - தென் கொரியா நாளை நள்ளிரவும், போர்ச்சுகல் - சுவிட்சர்லாந்து நாளை மறுதினம் நள்ளிரவும் மோதுகின்றன.

Related Stories: