ஆஸி-இங்கி. பாக்சிங் டே டெஸ்ட் மெல்போர்னில் இன்று துவக்கம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையேயான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே பாரம்பரியம் மிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 3 போட்டிகளில் ஆஸ்திரேலியா வென்று 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி ஆஷஸ் கோப்பையை தக்க வைத்து கொண்டது. இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டெஸ்ட் பாக்சிங் டே போட்டியாக இன்று மெல்போர்னில் தொடங்குகிறது. இதில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார். முதல் 2 போட்டியிலும் கேப்டனாக செயல்பட்ட ஸ்மித், 3வது போட்டியில் உடல்நலக்குறைவால் ஆடவில்லை.

முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த பேட் கம்மின்ஸ் குணமடைந்து 3வது போட்டியில் அணிக்கு திரும்பியதால் கேப்டனாக செயல்பட்டார். மீண்டும் அவருக்கு முதுகு வலி ஏற்பட்டுள்ளதால் எஞ்சிய 2 டெஸ்ட்டிலும் இருந்து விலகி உள்ளார். இதேபோல் நாதன் லயனும் காயம் காரணம் விலகி உள்ளார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் ஆஸ்திரேலியா அசுர பலத்தில் இருப்பதால் 4வது டெஸ்டிலும் வெற்றி நடை போட காத்திருக்கிறது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி ஹாட்ரிக் படுதோல்வி அடைந்துள்ளதால் கடும் விமர்சனங்கள் எழுந்து உள்ளன. பேட்டிங்கில் ஜோரூட் மட்டும் ஒரு சதம் அடித்து உள்ளார். கேப்டன் ஸ்டோக்ஸ் மற்றும் ஹாரி புரூக் கணிசமான ரன்கள் எடுத்து உள்ளனர். மற்ற வீரர்கள் அனைவரும் பெரிதாக ரன்கள் எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். பவுலர்கள் யாரும் துல்லியமாக வீசவில்லை. ரன்கள் மட்டுமே வாரி வழங்கி வருகின்றனர்.

எஞ்சிய 2 போட்டிகளில் வென்று ஆறுதல் தேட வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து உள்ளது. பாக்சிங் டே டெஸ்ட்டில் ஆடும் 2 அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் சோப்ரா ஆர்ச்சர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக கஸ் அட்கின்சன் சேர்க்கப்பட்டுள்ளார். பேட்ஸ்மேன் ஒல்லி போப்புக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஜேக்கப்பெத்தேல் இடம் பெற்றுள்ளார். இதேபோல் ஆஸ்திரேலியா அணியில் பேட் கம்மின்ஸ், ஜோஸ் இங்கிலீஸ், நாதன் லாயன் பதிலாக ஸ்டீவ் ஸ்மித், மைக்கேல் நெசர், ஜெய் ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட உள்ளனர். இந்த பாக்சிங் டே டெஸ்ட்டில் வெல்ல போவது யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
2025-27ம் ஆண்டின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 6 போட்டியிலும் வென்று 100 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி கடைசி 4 போட்டிகளிலும் தோல்வியடைந்து 7 இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

* பிளேயிங் லெவனில் யார்? யார்?
ஆடும் இங்கிலாந்து லெவன்: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஜேக்கப் பெதெல், ஜோ ரூட், ஹார் ப்ரூக், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), வில் ஜாக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டாங்.

* உத்தேசிக்கப்பட்ட ஆஸ்திரேலியா ஆடும் லெவன்: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜேக் வெதரால்ட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, உஸ்மான் கவாஜா, கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், ஜெய் ரிசசர்ட்சன், மைக்லே நெசர்

* பாக்சிங் டே என்றால் என்ன?
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிக்கை தினத்தில் தேவாலயங்கள் முன் பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும். தேவாலயத்துக்கு வருபவர்கள் அந்த பெட்டியில் தங்களால் முடிந்த பணம் உள்ளிட்ட நன்கொடைகளை செலுத்துவார்கள். மறுநாள் டிசம்பர் 26ம் தேதி அன்று அந்த பெட்டியை பிரிந்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை, எளிய மக்களுக்கும், வறுமையில் உள்ளவர்களுக்கு வழங்குவர். இவ்வாறு பெட்டியை திறக்கும் நாளைத்தான் அங்கு ‘பாக்சிங் டே’ என்று அழைக்கின்றனர். இந்த நாளில் தொடங்கும் டெஸ்ட் பாக்சிங் டே டெஸ்ட் என அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பாக்சிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலியா ஆடி வருகிறது குறிப்பிடத்தக்கது.

* இங்கிலாந்து அணிக்கு அடுத்த பயிற்சியாளர் ரவி சாஸ்திரி?
ஆஷஸ் தொடரை இங்கிலாந்து இழந்ததால் பயிற்சியாளர் மெக்கல்லத்தை மாற்ற வேண்டும் என மாஜி இங்கிலாந்து வீரர் ஜெப்ரி பாய்காட் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை, இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் வீரர் பனேசர் பரிந்துரைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘ஆஸ்திரேலியாவின் பலவீனத்தை தெரிந்து வைத்துள்ள ஒருவர் அடுத்த பயிற்சியாளராக வரவேண்டும். ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எப்படி என்பதை அறிந்த ஒருவர் பற்றி நாம்சிந்திக்க வேண்டும். ஆஸ்திரேலியாவின் பலவீனம் மற்றும் அதன் யுக்தியை எப்படி சாதகமாக பயன்படுத்திக் கொள்வது என அறிந்த பயிற்சியாளர் நமக்கு வேண்டும். எனவே, பிரெண்டன் மெக்கலத்திற்குப் பிறகு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும்’ என்றார். கடந்த 2017, 2021ம் ஆண்டுகளில் ரவி சாஸ்திரி பயிற்சியாளாராக இருந்த போது இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை வென்றது குறிபிடத்தக்கது.

Related Stories: