* 45ல் இத்தாலி நடிகரை கரம் பிடித்த வீனஸ்
பாம் பீச்: அமெரிக்காவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் (45), இத்தாலியை சேர்ந்த மாடல் மற்றும் நடிகர் ஆந்ரே ப்ரேடியை திருமணம் செய்துள்ளார். புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பீச்சில், 5 நாளாக நடந்து வரும் திருமண விழா கொண்டாட்டங்களின் இடையே இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த மகளிர் ஒற்றையர் போட்டி ஒன்றில் அட்டகாசமாக வென்ற வீனஸ் வில்லியம்ஸ், உலகளவில் 2வது அதிக வயதில் டென்னிஸ் போட்டியில் வென்ற வீராங்கனை என்ற சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது. வீனஸ் வில்லியம்ஸ் இதுவரை, 7 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
* எல்ஐவி கோல்ப் விலகினார் புரூக்ஸ்
லாஸ் ஏஞ்சலஸ்: கடந்த 2017 மற்றும் 2018ல் நடந்த யுஎஸ் ஓபன் கோல்ப் போட்டிகளில் வென்று சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க வீரர் புரூக்ஸ் கோப்கா (35), மொத்தத்தில் 5 முறை சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். இவர், கடந்த 2022ம் ஆண்டு முதல் எல்ஐவி கோல்ப் போட்டித் தொடர்களில் ஆடி வருகிறார். இந்நிலையில், திடீர் திருப்பமாக, எல்ஐவி கோல்ப் போட்டிகளில் இருந்து விலகுவதாக புரூக்ஸ் அறிவித்துள்ளார். தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிட விரும்புவதாகவும், அதனால், எல்ஐவி கோல்பில் இருந்து வெளியேறுவதாகவும் புரூக்ஸ் கூறியுள்ளார்.
