இளம் வீராங்கனைக்கு பாலியல் தொல்லை: கைதாகும் ஆர்சிபி நட்சத்திரம்; ஐபிஎல்லில் பங்கேற்பது சந்தேகம்

ஜெயப்பூர்: இளம் வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அவர் ஐபிஎல்லில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வரும் யாஷ் தயாள் மீது உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஜூன் மாதம் திருமண மோசடி புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் யாஷ் தயாள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனால், உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்க உத்தரப்பிரதேச கிரிக்கெட் சங்கம், யாஷ் தயாளுக்கு தடை விதித்தது. இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் யாஷ் தயாளை கைது செய்ய இடைக்கால தடை விதித்தது. இந்த பரபரப்பு முடிவடைவதற்குள் யாஷ் தயாள் மீது ஜெய்ப்பூரை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீராங்கனை பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். அந்த புகாரில், கிரிக்கெட்டில் தன்னை வளர்த்துவிடுவதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 2 ஆண்டுகளாக யாஷ் தயால் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருந்தார்.

அந்த பெண் பாதிக்கப்பட்டபோது, அவருக்கு 17 வயதே ஆனதால், யாஷ் தயாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து யாஷ் தயாள் தரப்பில் ஜெய்ப்பூரில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஜெய்ப்பூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம், .‘இந்த கட்டத்தில் ஜாமீன் வழங்கினால் , விசாரணை பாதிக்கப்படும். வழக்கின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு முன்ஜாமீன் வழங்க முடியாது’ என உத்தரவிட்டது. இதனால் யாஷ் தயாள் விரைவில் கைதாக வாய்ப்புள்ளது. யாஷ் தயாள் கைது செய்யப்படும் பட்சத்தில் ஐபிஎஸ் உள்ளிட்ட தொடர்களில் பங்கேற்கும் வாய்ப்பை இழப்பார் என்று கூறப்படுகிறது.

Related Stories: