பாடகர் கொலை வழக்கு மூளையாக செயல்பட்ட தாதா அமெரிக்காவில் சிக்கினார்

சண்டிகர்: பஞ்சாபில் பிரபல பாடகர் மூசேவாலா கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட கோல்டி ப்ரார் அமெரிக்காவில் கைது  செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பக்வந்த் மான் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் பிரபல பாடகரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூசேவாலா மான்சா மாவட்டத்தில் மே 29ம் தேதி மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  இது தொடர்பாக  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்துக்கு தாதா கோல்டி ப்ரார் பொறுப்பேற்றார். கடந்த ஆண்டு நிகழ்ந்த அகாலி தலைவர் விக்கி மிட்டுகேராவின் கொலைக்கு பழிவாங்கும் வகையில் மூசேவாலா சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர் முகநூலில் கூறியிருந்தார். கோல்டி ப்ரார் கடந்த 2017ம் ஆண்டு மாணவர் விசாவில் கனடா சென்று வசித்து வந்தார். மூசேவாலா கொலையில் மூளையாக செயல்பட்ட கோல்டி ப்ரார் சமீபத்தில் அமெரிக்காவின் ப்ரெஸ்னோ நகரில் குடிபெயர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 20ம் தேதி கலிபோர்னியாவில் கோல்டி ப்ரார் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை உறுதி செய்த பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான், அவரை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: