அவதார் 2 படத்துக்கு இந்தியாவில் திடீர் சிக்கல்

திருவனந்தபுரம்: அவதார் 2 படத்தை இந்தியாவில் சில மாநிலங்களில் ரிலீஸ் செய்வதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான படம் அவதார். இதன் இரண்டாம் பாகம் அவதார் தி வே ஆஃப் வாட்டர், வரும் டிசம்பர் 16ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்துக்கான எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு படத்தின் 3 நாட்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி முடிந்துள்ளது. இதில் படம் வெளியாகும் முதல் 3 நாட்களில் டிக்கெட்டுகள் மொத்தமாக விற்று தீர்ந்துள்ளன.

இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதில் வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த படத்துக்கு முதல் வாரத்தில் 65 சதவீத வசூல் தொகையை வினியோகஸ்தர்கள் கேட்கிறார்கள். ஆனால் வழக்கப்படி 55 சதவீத வசூலைத்தான் கொடுக்க முடியும் என தியேட்டர் அதிபர்கள் கறாராக சொல்கிறார்கள். இதனால் இந்த விவகாரம் இப்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதனால் குறிப்பிட்ட சில மாநிலங்களில் திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மும்பையிலுள்ள தயாரிப்பாளர் கில்டு வினியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

Related Stories: