தீவிரவாதிகள் எச்சரித்த 2வது நாளில் பாக்.கில் தற்கொலை படை தாக்குதல்: 4 பேர் பலி ; 20 வீரர்கள் காயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் எச்சரித்திருந்த நிலையில், தீவிரவாதி நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். 20 பாதுகாப்பு படையினர் உட்பட 23 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பின்னர், எதிர்கட்சிகளின் சார்பில் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பொது கூட்டம் ஒன்றில் பங்கேற்ற இம்ரான் கான் மீது துப்பாகிச் சூடு நடத்தப்பட்டது. இதனால், பாகிஸ்தான் அரசியலில் நிச்சயமற்ற நிலை நீடிக்கிறது.

இந்நிலையில், பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் கூட்டுக் குழுவாக உருவாக்கப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பானது, கைபர்-பக்துன்க்வா மாகாணத்தின் பன்னு மற்றும் லக்கி மார்வாட் பகுதிகளில் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘முஜாஹிதீன்களுக்கு எதிராக பாகிஸ்தான் ராணுவமும் உளவுத்துறையும் நம் மீதான தாக்குதல்களை நிறுத்தவில்லை. அதனால் பாகிஸ்தான் அரசுடன் போடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம். எனவே பாகிஸ்தான் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் நீங்கள் (தீவிரவாதிகள்) பதிலடி தாக்குதல்களை நடத்த வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில், நாட்டின் அமைதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமில் பணி செய்யும் ஊழியர்களை  பாதுகாப்பதற்காக போலீசாரை ஏற்றிச் சென்ற ரோந்துப் போலீஸ்  டிரக் அருகே தீவிரவாதி ஒருவர் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 4 பேர் பலியாகி உள்ளனர். 20 போலீசார் உட்பட 23 பேர் காயமடைந்தனர்.  இந்த தாக்குதலுக்கு தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட உமர் காலித் குராஸ்னி (எ) அப்துல் வாலி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு கூறி உள்ளது. இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், தாக்குதல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: