எச்.ஐ.வி தொற்றினை கண்டறிய பரிசோதனை தமிழகத்தில் தொற்றின் அளவு 0.18 சதவீதமாக குறைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: புதிய எச்.ஐ.வி. தொற்றினைக் கண்டறிய 2,090 நம்பிக்கை மையங்களின் மூலம், எச்.ஐ.வி தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்றின் அளவு தற்போது 0.18 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்த ஆண்டிற்கான உலக எய்ட்ஸ் நாளின் கருப்பொருள் சமப்படுத்துதல்’ என்பதாகும். இந்தக் கருப்பொருளைச் சிறப்பாக செயல்படுத்திட, குறிப்பாக, எச்.ஐ.வி தொற்றினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து, சமப்படுத்தும் பாங்கினையும், எச்.ஐ.வி, எய்ட்ஸ் பரவலைக் குறைப்பதையும் உறுதி செய்திட நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.

தமிழ்நாட்டில் எச்.ஐ.வி தொற்றின் அளவு தற்போது 0.18 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 0.24 விழுக்காட்டை விடக் குறைவானதாகும். 2,090 நம்பிக்கை மையங்களின் மூலம், எச்.ஐ.வி தொற்றுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. எச்.ஐ.வி, எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதி செய்திட கலைஞரால்  தமிழ்நாடு அரசின் அறக்கட்டளை 2009ம் ஆண்டு ஐந்து கோடி ரூபாய் வைப்பு நிதியுடன் ஏற்படுத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகத் தமிழக அரசு இத்திட்டங்களுக்காக இதுவரை ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அந்நிதியிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையின் மூலமாக ஊட்டச்சத்து மிக்க உணவு மற்றும் கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏறத்தாழ 3,200 குழந்தைகள் பயன் பெற்றுள்ளார்கள். இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை இச்சமூகத்தில் எவ்விதப் பாகுபாடும், ஒதுக்குதலுமின்றித் தகுந்த மரியாதையுடனும், மதிப்புடனும் நடத்தி அவர்களுக்கு அன்பையும், ஆதரவையும் அளிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: