ஜனாதிபதி முர்முவின் கவலை எதிரொலி; ஜாமீன் கிடைத்த சிறை கைதிகளை விடுவிக்க ஏற்பாடு: உச்ச நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: ஜனாதிபதி திரவுபதி முர்முவின் கவலை எதிரொலியாக ஜாமீன் கிடைத்த சிறை கைதிகளை விடுவிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நடந்த அரசியலமைப்பு தின நிகழ்ச்சியில்  பங்கேற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு, ‘நீதிமன்றங்கள் மூலம் ஜாமீன்  கிடைத்தும் சிறையில் இருந்து வெளியே வரமுடியாமல் வாடும் பழங்குடியினர்  உள்ளிட்டோரின் நிலைமை கவலை அளிக்கிறது. ஜாமீனிற்கான பணம் செலுத்த  இயலாததால், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறு குற்றங்களுக்காக  அடைக்கப்பட்டுள்ள அவர்களை விடுவிக்க நீதித்துறை ஏதாவது செய்ய வேண்டும்’ என்று உணர்ச்சிவசப்பட கூறினார். அதன் தொடர்ச்சியாக ஜாமீன் கிடைத்தும் சிறைகளில் வாடும் கைதிகள் குறித்த விபரங்களை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு நாடு முழுவதும் உள்ள சிறை அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான சுற்றிக்கையும் உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது.

அதில், விசாரணைக் கைதிகளின் பெயர்கள், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள், ஜாமீன் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதி, ஜாமீன் நிபந்தனைகள் நிறைவேற்றப்படாதது மற்றும் ஜாமீன் உத்தரவுக்குப் பிறகு அவர்கள் சிறையில் கழித்த காலம் போன்ற விவரங்களை சிறை அதிகாரிகள் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் பேசிய ஜனாதிபதி திரவுபதி முர்மு, சிறையில் வாடும் கைதிகள் குறித்து வருத்தப்பட்ட விஷயத்தை உச்சநீதிமன்றம் சீரியசாக எடுத்துக் கொண்டதால், ஜாமீன் கிடைத்தும் வெளியே வரமுடியாமல் தவிக்கும் கைதிகளுக்கு விடிவு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: