எய்ம்ஸ் பணிகளுக்கான நிதியை ஜப்பான் நிறுவனம் விடுவிக்கவில்லை: ஆர்டிஐ கேள்விக்கு அதிகாரி பதில்

மதுரை: மதுரை எய்ம்ஸ் திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்து வரும் நிலையில், இதுவரை ஜப்பான் நாட்டின் ஜிகா நிறுவனம் மதுரை எய்ம்ஸ் பணிகளுக்கான நிதியை விடுவிக்கவில்லை என்ற தகவல் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015, பிப்.28ம் தேதி ஒன்றிய அரசு அறிவித்தது. வெறும் அறிவிப்போடு பணிகள் நின்றன. எய்ம்ஸ் அமையும் இடம் தேர்வு செய்யவே 3 ஆண்டுகளானது. ஒருவழியாக 2018 ஜூனில் மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது.

அதே காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட பிற எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் வேகமாக நடந்து, திறக்கப்பட்டு விட்டன. மேலும் சில எய்ம்ஸ் மருத்துவமனைகளின் கட்டுமான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. ஆனால், 2022ல் திறக்கப்பட வேண்டிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மட்டுமே, தற்போது வரை பணிகள் எதுவுமே துவங்காமல் உள்ளது. கடந்த 2019ல் பாராளுமன்ற தேர்தல் நெருங்கிய வேளையில், 2019, ஜனவரி 27ல் மதுரை எய்ம்ஸ்க்கு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின்னர் ஒருவழியாக ஜப்பானின் ஜிகா நிறுவனத்துடன் கடன் ஒப்பந்தம் கடந்த மார்ச் 2021ல் செய்யப்பட்டது.

இதையடுத்து பணி தொடங்கும் என்று கூறப்பட்ட நிலையில், ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னும் தொடங்கப்படவில்லை. எய்ம்ஸ் மருத்துமவனைக்கான திட்டத்தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சமூக ஆர்வலர் பாண்டியராஜா மதுரை எய்ம்ஸ் குறித்து ஆர்டிஐ மூலம் எய்ம்ஸ் திட்டத்தில் தற்போதைய நிலவரம் குறித்து சில கேள்விகளை கேட்டிருந்தார். இதற்கு மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்திற்கென நியமிக்கப்பட்டுள்ள செயற்பொறியாளரும், தலைமை பொது தகவல் அலுவலருமான என்.நாகராஜூ கூறியுள்ள பதிலில், ‘‘எய்ம்ஸ் அமைவதற்கான மொத்த திட்ட தொகை ரூ.1,977.8 கோடி.

ஜப்பான் நாட்டின் நிதிவழங்கும் நிறுவனமான ஜிகா ரூ.1,621.8 கோடி வழங்குகிறது. ஜிகா 82 சதவீத தொகையும், ஒன்றிய அரசு 18 சதவீத தொகையும் வழங்கிட வேண்டும். ஆனால், இதுவரை ஜிகா நிறுவனம் மதுரை எய்ம்ஸ்க்கான நிதியை விடுவிக்கவில்லை. திருத்தப்பட்ட திட்ட மதிப்பீடுக்கு மட்டும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் திட்டம் விரைந்து நிறைவேற்றப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்து வரும் நிலையில், இதுவரை ஜிகா நிறுவனம் மதுரை எய்ம்ஸ் பணிகளுக்கான நிதியை விடுவிக்கவே இல்லை என்ற தகவல் ஆர்டிஐ மூலம் தெரிய வந்திருப்பது, தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்திருக்கிறது.

Related Stories: