தாராவி மறுசீரமைப்பு திட்டம் ரூ.5,069 கோடிக்கு அதானி நிறுவனத்துக்கு டெண்டர்

மும்பை: தாராவி மறு சீரமைப்புக்கான ரூ.5,069 கோடி திட்டப்பணி அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில், தாராவி மறு சீரமைப்பு திட்டம் செயல்படுத்த கடந்த 1995ம் ஆண்டிலேயே முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதற்காக 4 முறை டெண்டர் விட்டும், பின்னர் ரத்து செய்யப்பட்டு விட்டன. 15 ஆண்டுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த நிலையில், சிவசேனா ஷிண்டே அணி - பாஜ கூட்டணி அரசு திட்டத்துக்கு டெண்டர் வெளியிட்டிருந்தது. இதற்கு அதானி குழுமத்தை சேர்ந்த அதானி பிராப்பர்ட்டீஸ், டிஎல்எப் மற்றும் ஸ்ரீ நமான் டெவலப்பர்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்தன. அதிகபட்ச முதலீட்டு தொகை குறிப்பிடும் நிறுவனத்துக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த திட்டப்பணிக்கு வரையறை செய்யப்பட்டிருந்த தொகையை விட கூடுதலாக ரூ.1,600 கோடி குறிப்பிட்டு, ரூ.5,069 கோடி முதலீடு செய்வதாக அதானி பிராப்பர்ட்டீஸ் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து, அதானி நிறுவனத்துக்கு இந்த திட்டப் பணி ஒப்படைக்கப்படுவதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: