ஆப் ஸ்டோரில் இருந்து டிவிட்டரை நீக்குவதாக ஆப்பிள் மிரட்டல்?.. டிவிட்டர் அதிபர் எலான் மஸ்க் பகிரங்க குற்றச்சாட்டு

வாஷிங்டன்: ஆப் ஸ்டோரில் இருந்து டிவிட்டரை நீக்குவோம் என்று ஆப்பிள் நிறுவனம் அச்சுறுத்தி வருவதாக எலான் மஸ்க் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். டிவிட்டர் நிறுவனத்தை தன்வசம் படுத்தியது முதல் பல்வேறு அதிரடி மாற்றங்களை எலான் மஸ்க் செய்து வருகிறார். அவர் எடுத்துவரும் நடவடிக்கைகளும், தெரிவித்து வரும் கருத்துகளும் விமர்சனத்தை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் ஆப்பிள் உள்ளிட்ட சில நிறுவனங்கள் டிவிட்டரை தங்களது ஆப் ஸ்டோரில் இருந்து நீக்க திட்டமிட்டிருப்பதாக டிவிட்டரில் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் தனது ஆப் ஸ்டோரில் இருந்து டிவிட்டரை நிறுத்தி வைப்பதாக அச்சுறுத்தி உள்ளதாகவும் ஆனால் அதற்கான காரணத்தை கூறவில்லை என்றும் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். ஏற்கனவே ஆப்பிள் நிறுவனம் டிவிட்டரில் விளம்பரம் செய்வதை நிறுத்தி விட்டதாக தெரிவித்துள்ள மஸ்க் ஆப்பிள் நிர்வாகம் பேச்சு சுதந்திரத்தை வெறுக்கிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். பேச்சு சுதந்திரத்தை முடக்கும் நடவடிக்கையில் ஆப்பிள் ஈடுபட்டுள்ளதாகவும் அதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ள மஸ்க் ஆப்பிளில் என்ன நடக்கிறது என்று வினவியிருக்கிறார்.

ஆப்பிள் மற்றும் கூகுள் ஆப் ஸ்டோர்களில் இருந்து டிவிட்டர் அகற்றப்படுவதை விரும்பவில்லை என்று கூறியுள்ள எலான் மஸ்க் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் ஆன்ட்ராய்டு, ஆப்பிள் போன்களுக்கு மாற்றாக புதிய ஸ்மார்ட்போனை உருவாக்குவதற்கு தவிர வேறு வழியில்லை என்றும் டுவீட் செய்துள்ளார். ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களை பாதிக்கும் அனைத்து தணிக்கை நடவடிக்கைகளையும் வெளியிட வேண்டுமா, வேண்டாம என்ற தலைபில் வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்பு ஒன்றையும் தனது டிவிட்டர் பக்கத்தில் மஸ்க் நடத்தி வருகிறார்.

Related Stories: