ஆந்திரா ரயில் நிலையத்தில் பரபரப்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் தீ பயணிகள் அலறியடித்து ஓட்டம்

திருமலை: பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பயணிகள் உடமைகளுடன் கீழே இறங்கி அலறியடித்து ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் குப்பம் ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு பெட்டியில் திடீரென கரும்புகை கிளம்பியது. பின்னர்,  தீ மளமளவென எரிந்ததால், ரயில் நின்றவுடன் இதை பார்த்த பயணிகள் தங்கள் உடமைகளுடன் ரயிலில் இருந்து கீழே இறங்கி ஓடினர்.

தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் தீயணைப்பு கருவிகளுடன் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். புகை பரவியதை கண்ட பயணிகள் உடனடியாக கீழே இறங்கிச் சென்றதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  ஆனால் ரயிலில் எவ்வாறு தீப்பிடித்தது என்பது குறித்து விசாரணை செய்து வருவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சுமார் ஒருமணிநேரம் காலதாமதாக ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Related Stories: