பெருமாள் கோயில் உண்டியல் உடைத்து நகை, பணம் கொள்ளை: நந்திரவரத்தில் பரபரப்பு

கூடுவாஞ்சேரி: நந்திவரத்தில் பெருமாள் கோயில் உண்டியலை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். நந்திவரம்-கூடுவாஞ்சேரி, நந்திவரம் காலனிக்கு செல்லும் பிரதான சாலையோரத்தில் பழமைவாய்ந்த சத்யபாமா-ருக்மணி சமேத வேணுகோபால பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சுவாமியை தரிசித்து விட்டு செல்வார்கள். உண்டியலில் பக்தர்கள் காணிக்கையும் செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் வழக்கம் போல பூசாரி, கோயில் நடையை திறந்து உள்ளே சென்றார். அப்போது, கோயிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, ஆங்காங்கே சில்லறை காசுகள் சிதறி கிடந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். உடனே கூடுவாஞ்சேரி போலீசாருக்கும் கோயில் நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். கோயிலின் முன்பக்க கிரில் கதவை நள்ளிரவில் மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து உண்டியல் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.

கடந்த சில ஆண்டுகளாக உண்டியல் பணம் எண்ணப்படாததால் ₹1 லட்சத்துக்கு அதிகமான காணிக்கை பணம் மற்றும் நகைகள் கொள்ளை போயிருக்கலாம் என கோயில் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

Related Stories: