சித்தூர் மாவட்டத்தில் அடுத்தாண்டில் 600 கிராமங்களில் பயனாளிகளுக்கு இலவச பட்டா-சித்தூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தகவல்

சித்தூர் : சித்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் 600 கிராமங்களில் பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கப்படும் என்று அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திரரெட்டி தெரிவித்துள்ளார். சித்தூர் அம்பேத்கர் பவனில் நம் பூமி நம் உரிமை திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு இலவசமாக பட்டா வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அமைச்சர் பெத்திரெட்டி ராமச்சந்திராரெட்டி தலைமை தாங்கி 587 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார். நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: முதல்வர் ஜெகன்மோகன் மாநிலம் முழுவதும் தேர்தலின் போது மேற்கொண்ட பாதையாத்திரையின்போது நவரத்தினா என்கிற நலத்திட்டத்தை அறிவித்தார். அப்போது, கொடுத்த வாக்குறுதிகளை ஒன்று விடாமல் நிறைவேற்றி விட்டார். இதுவரை அவரது மூன்றை ஆண்டு கால ஆட்சியில் 98 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.

மாநிலம் முழுவதும் கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் அளந்து பயனாளிகளுக்கு சொந்தம் என பட்டா வழங்கப்பட்டது. பிறகு யாருக்கும் எந்த ஒரு ஆட்சியிலும் பட்டா வழங்கவில்லை.

முதல்வர் ஜெகன்மோகன் கிராமங்களில் உள்ள புறம்போக்கு நிலங்களில் பல வருடங்களாக பராமரிப்பில் இருக்கும் நிலங்களை அளந்து பயனாளிகளுக்கு இலவச பட்டா செய்து தர வேண்டும் என உத்தரவிட்டார்.

அதன்படி, ஒவ்வொரு மாவட்டம் முழுவதும் பட்டா செய்து பயனாளிகளுக்கு வழங்கி வருகிறோம். முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவரான சந்திரபாபுநாயுடு நாங்கள் மக்களுக்கு செய்யும் நல திட்டங்களை குறை கூறி வருகிறார். அவரது ஆட்சியில் இதுவரை கொடுத்த ஒரு நல்ல வாக்குறுதி கூட நிறைவேற்ற வில்லை தற்போது ஆளும் கட்சியினர் மீது பல்வேறு பொய்களை சுமத்தி வருகிறார். அவர் முதல்வரான உடன் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் 50 பைசாவுக்கு ஒரு யூனிட் மின்சாரம் வழங்கப்படுவதாக தெரிவித்தார். 14 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் ஒரு யூனிட் மின்சாரம் வழங்கவில்லை.

சித்தூர் மாவட்டத்தில் 130 கிராமங்களில் சர்வே செய்யப்பட்டு பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் மீதம் உள்ள 600 கிராமங்களில் சர்வே நடத்தி பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார். இதில் துணை முதல்வர் நாராயணசாமி, கலெக்டர் முருகன் ஹரி நாராயணன், இணை கலெக்டர் வெங்கடேஷ், எம்பி ரெட்டியப்பா, ஜில்லா பரிஷத் தலைவர் வாசு, ஜில்லா பரிஷத் துணை தலைவர் ரம்யா தனஞ்செயா, எம்எல்ஏக்கள் ஜங்காளப்பள்ளி சீனிவாசலு, பாபு, அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: